40 தொகுதிகள் கொண்ட மிசோரம் சட்டப்பேரவைக்கு நேற்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், எந்த பிரச்னையும் இன்றி தேர்தல் வாக்குப்பதிவு மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது. பொதுமக்களும் மிகுந்த ஆர்வமுடன் வருகை தந்து ஜனநாயக கடமையாற்றினர். தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மிசோரம் மாநிலத்தில் 77.04 % வாக்குகள் பதிவானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், 90 தொகுதிகள் கொண்ட சத்தீஸ்கர் சட்டப்பேரவைக்கு முதற்கட்டமாக 20 தொகுதிகளில் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. நக்சல்கள் அதிகம் உள்ள தொகுதிகளான 10 தொகுதிகளில் காலை 7 மணி முதல் 3 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. மற்ற 10 தொகுதிகளில் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. மொத்தம் 70.87 % வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
வாக்குப்பதிவுக்கு இடையே சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் நக்சல்கள் நடத்திய தாக்குதலில் சிறப்புப் படையினர் 3 பேர் காயமடைந்தனர். சத்தீஸ்கரில் மீதமுள்ள 70 தொகுதிகளில் வரும் 17ஆம் தேதி வாக்குப்பதிவு நடத்தப்பட உள்ளது. மிசோரம், சத்தீஸ்கர் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கும் சேர்த்து வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3 ஆம் தேதி நடைபெற உள்ளது.