காவல்துறைக்கும் ரவுடி கும்பலுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 8 போலீசார் உயிரிழந்தனர்
உத்தரப்பிரதேசத்தில் ரவுடிகளின் அராஜகம் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து குற்றவாளிகளைக் கைது செய்ய காவல்துறையினர் தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி, கான்பூரில் ரவுடி கும்பல் ஒன்றைச் சுற்றி வளைத்தபோது போலீசார் மீது ரவுடி கும்பல் நடத்திய துப்பாக்கித் தாக்குதலில் 8 போலீசார் உயிரிழந்தனர். 4 பேர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விகாஷ் துபே என்ற ரவுடி மீது 60க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இந்த ரவுடி கான்பூரின் டிக்ரு கிராமத்தில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனை அடுத்து போலீசார் ரவுடி தங்கி இருக்கும் இடத்தை சுற்றி வளைத்தனர்.
அப்போது கட்டடத்தின் மேல் பகுதியில் பதுங்கி இருந்த ரவுடி கும்பல் போலீசார் மீது சரமாரியாகத் துப்பாக்கியால் சுட்டனர். இதில் 8 போலீசார் உயிரிழந்தனர். காவலர்களின் வீர மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள உபி முதல்வர் யோகி ஆதித்யநாத், ரவுடி கும்பல் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.