விங் கமாண்டர் அபிநந்தனுக்கு பரம்வீர் சக்ரா விருது வழங்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த 14 ஆம் தேதி பாகிஸ்தானைச் சேர்ந்த எஃப் 16 ரக விமானத்தை இந்தியாவின் மிக் 21 ரக போர் விமானத்தை கொண்டு விரட்டியடிக்கப்பட்டது. அப்போது அந்த விமானத்தை இயக்கிய அபிநந்தன் பாகிஸ்தானால் சிறைபிடிக்கப்பட்டு தற்போது தாயகம் திரும்பி மருத்துவ பரிசோதனையில் ஈடுபட்டு வருகிறார்.
இதைத்தொடர்ந்து அபிநந்தனின் உடல்தகுதி உறுதிபடுத்தப்பட்ட பின்னரே அவர் பணியில் சேர்க்கப்படுவார் எனவும் உடல்தகுதி உறுதி செய்யப்பட்டப்பின் அதே பிரிவில் அவர் சேர்க்கப்படுவார் எனவும் இந்திய விமானப்படை தளபதி பி.எஸ் தனோவா தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், விங் கமாண்டர் அபிநந்தனுக்கு பரம்வீர் சக்ரா விருது வழங்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில், “பாகிஸ்தான் விமானத்தை துரத்திக்கொண்டு சென்றபோது எதிர்பாராத விதமாக அவர்கள் பிடியில் சிக்கிக் கொண்ட அபிநந்தன் தன் உயிரையும் பெரிதுபடுத்தாமல் மிகப்பெரிய சாகசத்தை செய்துள்ளார். மிக மோசமான நிலையிலும் வீரத்தை வெளிப்படுத்தி இதயங்களை வென்ற அபிநந்தன் கௌரவிக்கப்பட வேண்டும். ஆகவே வீரதீர செயல் புரியும் ராணுவத்தினருக்கு வழங்கப்படும் உயரிய விருதான பரம்வீர் சக்ரா விருது அபிநந்தனுக்கு வழங்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்த விருது ராணுவத்தில் மிக உயரிய பதவியில் இருக்கக்கூடிய சாதனைகள் புரிந்த எதிரியின் போரில் வெற்றி பெறக்கூடியவர்களுக்கும் தொடர்ச்சியாக பல ஆண்டுகள் பல்வேறு படிநிலைகளில் பணிபுரிந்து முழு வாழ்க்கையையும் ராணுவத்திற்காக சேவை புரிந்தவர்களுக்கு மட்டுமே தரப்படும்.
அபிநந்தன் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பதால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியே பிரதமருக்கு நேரடியாக கடிதம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.