டெல்லி அரசின் புதிய மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான பணமோசடி வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை முடிவு செய்தது. ஏற்கனவே இந்த வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா, சஞ்சய் சிங் எம்.பி., தெலங்கானா மாநில முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா உள்ளிட்டோர் சிறையில் உள்ளனர். அரவிந்த் கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்த கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்து அமலாக்கத்துறை இதுவரை 8 முறை சம்மன் அனுப்பியது. அது அனைத்தையும் அவர் நிராகரித்தார். ஆனால், விசாரணைக்கு ஆஜரானால் தான் கைது செய்யப்படுவோம் என்ற அச்சத்தினாலேயே அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, டெல்லி நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை வழக்கு தாக்கல் செய்தது. அந்த வழக்கில் கெஜ்ரிவாலுக்கு கடந்த 16ஆம் தேதி ஜாமீன் வழங்கப்பட்டது.
இந்த நிலையில், டெல்லி உயர்நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் இன்று (மார்ச் 21) மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், ’நான் விசாரணைக்கு ஆஜரானால் கைதுசெய்ய மாட்டோம் என அமலாக்கத்துறை உறுதியளிக்க வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி, முதல்வர் கெஜ்ரிவால் முன்வைத்த கோரிக்கையை நிராகரித்தார். கெஜ்ரிவால் கோரிக்கையின்மீது எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது என தெரிவித்தனர். இதனையடுத்து, டெல்லி உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மனுதாக்கல் செய்துள்ளார்.
இந்நிலையில், இரவு 8 மணியளவில் புதிய மதுபான கலால் வரி கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்தில் சோதனை நடத்தியது. சோதனையின் முடிவில் அரவிந்த் கெஜ்ரிவால் கைதுசெய்யப்பட்டு அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்படலாம் என்பதால் போலீசார் குவிக்கப்பட்டனர். அவரது ஆதரவாளர்களும் நிர்வாகிகளும் வீட்டின் முன்பு திரண்டனர்.
இந்நிலையில், சோதனைக்கு பிறகு அமலாக்கத்துறை அதிகாரிகளால் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார்.