ஒரு லட்சம் உயிர்களை பொதுமுடக்கம் காப்பாற்றியுள்ளது - பொருளாதார ஆய்வறிக்கை விளக்கம்

ஒரு லட்சம் உயிர்களை பொதுமுடக்கம் காப்பாற்றியுள்ளது - பொருளாதார ஆய்வறிக்கை விளக்கம்
ஒரு லட்சம் உயிர்களை பொதுமுடக்கம் காப்பாற்றியுள்ளது - பொருளாதார ஆய்வறிக்கை விளக்கம்
Published on

இந்திய அரசு வைரஸ் பரவலை தீவிர பொதுமுடக்கம் மூலமாக தடுத்திருக்காவிட்டால், இந்தியாவில் மேலும் ஒரு லட்சம் நபர்கள் கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உயிர் இழந்திருப்பார்கள் என இந்த வருட பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீவிரமான பொது முடக்கம் இல்லாதிருந்தால் மேலும் 37 லட்சம் நபர்கள் கரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என நிதி அமைச்சகத்தின் தலைமை பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் குறிப்பிட்டுள்ளார்.

கரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் பொது முடக்கம் காரணமாக பொருளாதாரம் பாதிக்கப்பட்டிருந்தாலும் உயிர் சேதம் கட்டுப்படுத்தப்படுகிறது என்று அவர் தெரிவித்திருக்கிறார். பொருளாதார வளர்ச்சியை திரும்பப் பெறமுடியும், ஆனால் உயிர்கள் ஒருமுறை பலியாகிவிட்டார் மீண்டு வர வாய்ப்பில்லை என்று அவர் அரசு ஏன் தீவிர பொதுமுடக்கத்தை அமல்படுத்தியது என்று விளக்கியிருக்கிறார். வைரஸ் பாதிப்பு காரணமாக மக்கள் எப்படியும் வீட்டுக்குள் முடங்கியிருப்பார்கள் என்றும், பொருளாதார பாதிப்பு தவிர்க்க முடியாதது என்றும் அறிக்கையில் விளக்கப்பட்டுள்ளது.



கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்த நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 7.7 சதவீதம் சரிவை சந்திக்க உள்ளது என பொருளாதார ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இந்தியா வேகமாக செயல்பட்டு வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தி இருப்பதால் அடுத்த நிதியாண்டில் வளர்ச்சி 11.5 சதவீதமாக இருக்கும் என்றும் அதற்கு அடுத்த நிதி ஆண்டில் 6.8 சதவீதமாக இருக்கும் என்றும் எகனாமிக் சர்வே என்று அழைக்கப்படும் பொருளாதார ஆய்வறிக்கை கணித்துள்ளது. தொழில்துறை மற்றும் சேவை துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வருடம் விவசாய துறை வளர்ச்சி பாதிப்படையவில்லை எனவும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்ற வருடம் ஏப்ரல்-மே-ஜூன் ஆகிய மாதங்களில் தீவிர பொதுமுடக்கம், அதன் பிறகு ஜூலை-ஆகஸ்ட்-செப்டம்பர் ஆகிய மாதங்களில் கரோனா வைரஸ் பரவல் உச்சகட்ட அதிகரிப்பு ஆகிய பிரச்சனைகள் இருந்த போதிலும், வேளாண் பொருட்களின் உற்பத்தி 3.4 சதவீதம் உயர்ந்துள்ளது. இது அரசு எடுத்திருக்கும் நடவடிக்கைகளின் காரணமாக தொடர்ந்து அதிகரிக்கும் என பொருளாதார ஆய்வறிக்கை நம்பிக்கை தெரிவித்துள்ளது. கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்திருந்த நிலையில் அதை மீட்டெடுக்க பல்வேறு சீர்திருத்தங்களை அரசு அறிவித்ததை நினைவுகூர்ந்த பொருளாதார ஆய்வறிக்கை, அதிலே மிகவும் முக்கியமானதாக சர்ச்சைக்குரிய மூன்று வேளாண் சட்டங்களை குறிப்பிட்டுள்ளது.

தற்போது கரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் இருப்பதாகவும், அத்துடன் இந்தியாவிலே தடுப்பூசி தற்போது படிப்படியாக நாடு முழுவதும் கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில், இந்த பாதிப்பிலிருந்து விரைவிலேயே இந்தியா மேலும் என்றும், இன்னும் இரண்டு வருடங்களில் இந்தியா உலகத்திலேயே அதிவேகமாக வளரும் பொருளாதாரமாக மீண்டும் உருவெடுக்கும் எனவும் அறிக்கையில் சொல்லப்பட்டு இருக்கிறது. அதாவது கரோனா வைரஸால் பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பில் இருந்து இந்தியா இரண்டு வருடங்களில் முழுவதுமாக மீண்டு வரும் என விளக்கப்பட்டுள்ளது.

மின்சாரத்திற்கான தேவை; ரயில் சரக்கு போக்குவரத்து; மற்றும் ஜிஎஸ்டி வரி வசூல் போன்ற முக்கிய விவரங்களின் மூலமாக பொருளாதாரம் விரைவாக மீண்டு எழுகிறது என்று காண முடிகிறது என்று குறிப்பிட்டுள்ள கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன், சென்ற வருடம் நவம்பர் மாதத்தில் மட்டும் 9.8 மில்லியன் டாலர் அந்நிய முதலீடு இந்தியாவுக்கு வந்திருக்கிறது என்றும் இது ஒரு புதிய உச்சம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பணவீக்கம் ஏற்ற-இறக்கத்துடன் இருந்த போதிலும், விரைவிலேயே அது கட்டுக்குள் வரும் என்றும் பொருளாதார ஆய்வறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது. அத்துடன் தற்போது ஏற்றுமதி குறைந்து இருந்தாலும், இறக்குமதி அதைவிட அதிகமாகக் குறைந்துள்ளது என்றும் ஆகவே இந்தியாவுக்கு தற்போது அந்நிய செலவாணி தட்டுப்பாடு போன்ற பிரச்சனைகள் இல்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com