கோவா மாநிலத்தில் காங்கிரசிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த எம்.எல்.ஏக்களில் மூன்று பேர் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர்.
கோவா மாநிலத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்ற போதும், சுயேச்சைகளுடன் இணைந்து பாஜக ஆட்சியை அமைத்தது. பாஜக ஆட்சி அமைத்தது முதல், பலமுறை தங்களை ஆட்சி அமைக்க உரிமை கோரி காங்கிரஸ் ஆளுநரை சந்தித்து முறையிட்டு வந்தது. ஆனால், கோவா அரசியலில் திடீர் திருப்பமாக, 10 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் அக்கட்சியிலிருந்து விலகி, கடந்த புதன்கிழமை பாஜகவில் இணைந்தனர்.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த மூன்று எம்.எல்.ஏக்களுக்கு அமைச்சர் பதவி கிடைத்துள்ளது. ஏற்கெனவே இந்த 10 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பாஜகவில் இணைந்தவுடன் அமைச்சரவையில் மாற்றம் ஏற்படும் எனத் தகவல் வெளியானது. இந்தச் சூழலில் தற்போது அவர்களில் மூன்று பேருக்கு அமைச்சர் பதவி கிடைத்துள்ளது.
முன்னதாக நேற்று கோவா சட்டப் பேரவையின் துணை சபாநாயகர் மைக்கேல் லோபோ தனது பதவியை ராஜினாமா செய்தார். இதுகுறித்து அவர், “நான் அமைச்சரவையில் இடம்பெற போவதால் என்னுடைய துணை சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்துள்ளேன்” எனத் தெரிவித்தார். தற்போது கோவா சட்டப் பேரவையில் பாஜகவின் பலம் 27ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் காங்கிரஸ் கட்சியின் பலம் வெறும் 5 ஆக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அமைச்சரவையில் மாற்றம் செய்யவுள்ள நிலையில், கோவா ஃபார்வேர்டு கட்சியின் எம்.எல்.ஏக்கள் 3 பேர் மற்றும் சுயேச்சை எம்.எல்.ஏ ஒருவர் என மொத்தம் 4 பேர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். காங்கிரஸ் கட்சியில் இருந்து மாறிவந்த 3 எம்.எல்.ஏக்கள் மற்றும் மைக்கேல் லோபோ ஆகிய 4 பேருக்கு அமைச்சரவையில் இடம் கிடைப்பதற்கு ஏதுவாக இந்த நீக்கம் செய்யப்பட்டுள்ளது.