சீனர்கள் புகழும் இந்திய மருத்துவர் துவாரகநாத் கோட்னிஸ் - யார் அவர்? அப்படி என்ன செய்தார்?

சீனர்கள் புகழும் இந்திய மருத்துவர் துவாரகநாத் கோட்னிஸ் - யார் அவர்? அப்படி என்ன செய்தார்?
சீனர்கள் புகழும் இந்திய மருத்துவர் துவாரகநாத் கோட்னிஸ் - யார் அவர்? அப்படி என்ன செய்தார்?
Published on
இந்தியா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளின் முத்தரப்பு பேச்சுகளின்போது மருத்துவர் துவாரகநாத் கோட்னிஸை வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நினைவுகூர்ந்தார். 
 
1938ல் சீன வீரர்களுக்கு சிகிச்சையளித்தவர் நினைவாக நிறுவப்பட்டுள்ள இந்தச் சிலை இந்திய மருத்துவர் துவாரகநாத் கோட்னிஸுடையது. இது இருக்கும் இடம் சீனாவின் சிக்கிசுவாங் என்ற நகரம். ஜப்பானிய ஆக்கிரமிப்பின்போது, சீன வீரர்களும் மக்களும் கொத்துக் கொத்தாக மடிந்து கொண்டிருந்தபோது அவர்களுக்கு உதவியவர்களில் ஒருவர் கோட்னிஸ். நிகழ்காலத்துக்கும் வருங்காலத்துக்கும் சேர்த்துப் போராடியவர் என்று இவருக்குப் புரட்சியாளர் மா சே துங் புகழாரம் சூட்டினார்.
 
 
மகாராஷ்டிர மாநிலம் சோலாப்பூரில் ஒரு சாதாரணக் குடும்பத்தில் பிறந்தவர் கோட்னிஸ். இந்தியாவில் சுதந்திரப் போராட்டமும் சீனாவில் உள்நாட்டுப் போரும் நடந்து கொண்டிருந்த காலம் அது. காயத்தால் உயிர் விடும் ராணுவ வீரர்களைக் காப்பாற்றுவதற்கு மருத்துவர்களை அனுப்பும்படி ஜவஹர்லால் நேருவுக்கு மா சே துங் சார்பிலான கடிதம் வந்தது. அதை ஏற்றுக் கொண்டு 1938-ஆம் ஆண்டில் சீனாவுக்குச் சென்ற 4 மருத்துவர்களைக் கொண்ட குழுவில் கோட்னிஸ் இடம்பெற்றிருந்தார். 
 
 
நால்வரையும் மா சே துங் நேரில் வந்து வரவேற்றார். புரட்சி ராணுவத்தின் மையமாக இருந்த யானான் நகரில் முகாம் அமைக்கப்பட்டது. ஒவ்வொரு நாளும் சுமார் 800 வீரர்கள் காயமடைந்து முகாமுக்குக் கொண்டுவரப்படுவார்களாம். மூன்று நாள்கள் வரை தூக்கமே இல்லாமல் சிகிச்சை அளிக்க வேண்டியிருந்ததாகவும் கூறப்படுகிறது. பல ஆண்டுகள் தொடர்ச்சியாகப் பணி. அவரது பணியைப் பாராட்டி உயரிய பொறுப்புகள் வழங்கப்பட்டன. இவர் உடன் பணியாற்றிய செவிலியரையே திருமணம் செய்து கொண்டார். 
 
 
ஆயினும் இடையறாத பணி கோட்னிஸின் உடலையும் உயிரையும் உருக்கியது. 32 வயதானபோது 1942-ஆம் ஆண்டு டிசம்பர் 9-ஆம் தேதி மரணமடைந்தார். இன்றும் சீன மக்களுக்கு அவர் ஒரு ஹீரோ. இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே கசப்புணர்வு ஏற்படும்போதெல்லாம் கோட்னிஸ் நினைவுகூரப்படுகிறார். இப்போது அதற்கான தருணம் உருவாகியிருக்கிறது.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com