வழக்கமாக துர்கா பூஜை கொண்டாட்டங்களின் போது துர்கா தேவி பத்து கைகளுடன் ஆயுதம் ஏந்தியபடி ஆக்ரோஷமாக கொல்கத்தாவின் வீதிகளில் அமைக்கப்பட்டுள்ள பந்தல்களில் அவதரிப்பார்.
இந்த வருட துர்கா பூஜை கொண்டாட்டங்கள் துவங்கியுள்ள நிலையில் நெட்டிசன்கள் கவனத்தை ஈர்த்துள்ளது கொல்கத்தாவில் பரிஷா கிளப் சார்பில் அமைக்கப்பட்டுள்ள பந்தலில் அவதரிக்கும் துர்கா தேவி நெட்டிசன்கள் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அண்மையில் அறிவிக்கப்பட்ட கொரோனா ஊரடங்கினால் பல புலம்பெயர் தொழிலாளர்கள் பல நூறு கிலோமீட்டர்கள் நடை வழியாக நடந்தே தங்களது சொந்த ஊர்களை அடைந்தனர். அதில் ஆண்களை காட்டிலும் தாய்மார்கள் குழந்தைகளை சுமந்துக் கொண்டும், கைகளில் உணவு தானியங்களை ஏந்திய படியும் பயணித்தனர். அந்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களிலும் அப்போது வைரலாகின.
இந்நிலையில் சராசரி இந்திய ஊரக பகுதிகளை சேர்ந்த பெண்களின் உருவில் துர்கை அவதரித்தால் எப்படியிருக்கும் என்ற யோசனை கலை இயக்குனர் ரிந்து தாஸ் என்பவருக்கு வர, அதற்கு உயிர் கொடுத்துள்ளார் சிற்பி பல்லப் பவ்மிக்.
“இந்த முறை துர்கா தேவி மூலம் சமூகத்திற்கு மெசேஜ் சொல்ல வேண்டுமென விரும்பினேன். அதனால் நகைகள் எதுவும் அணியாமல், கையில் ஆயுதம் எதுவும் ஏந்தாமல் குழந்தைகளையும், உணவு தானியங்களையும் ஏந்தியபடி நடந்து செல்லும் வகையில் துர்கா தேவியை வடிவமைக்க விரும்பினேன். மிகவும் எளிமையாக வண்ணங்கள் ஏதும் இல்லாமல் அசல் தன்மையோடு இருக்கும் வகையில் அந்த துர்கா பார்த்துக் கொண்டேன். அதே போல நான் வணங்கும் துர்கா பலூன் விற்று அதன் மூலம் குழந்தைகளின் பசிப்பிணியை போக்கும் தாயாக இருக்கவே விரும்பினேன். அதனால் தான் இந்த முயற்சி” என தெரிவித்துள்ளார் ரிந்து தாஸ்.
சாமானிய மனிதியின் உருவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த துர்கை சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.