வெளிநாடுகளில் வேலை வாங்கித்தருவதாக ஏமாற்றி 600 - 700 பேரை ஏமாற்றிய இருவரை நொய்டா போலீசார் கைது செய்துள்ளனர்.
நொய்டாவில் கடந்த 4 மாதங்களாக அம்பா எண்டர்ப்ரைசஸ் என்ற பெயரில் நிறுவனம் ஒன்று இயங்கி வந்துள்ளது. அதில் வெளிநாடுகளில் வேலைவாங்கித் தருவதாக பணம் பறித்துக்கொண்டு ஏமாற்றுவதாக அன்குர் குமார் சிங் என்ற நபர் செக்டார் 20 காவல் நிலையத்தில் புகாரளித்திருந்தார். அந்தப் புகாரில், அன்குர் மற்றும் அவரது நண்பர்கள் 15 பேரிடம் ஈரானில் வேலைவாங்கித் தருவதாகக் கூறி, விசா மற்றும் விமான டிக்கெட் வாங்குவதற்கு என ஒவ்வொருவரிடமும் ரூ.65,000 - ரூ. 1 லட்சம் வரை பணம் பெற்றுக்கொண்டதாகவும், ஆனால், அந்த ஆவணங்கள் அனைத்தும் கைக்கு வந்தபோது அவை போலி என தெரியவந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். அந்த புகாரின்பேரில், அடையாளம் தெரியாத நபர்கள்மீது ஏமாற்றுதல் மற்றும் மோசடி ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து தேடிவந்தனர்.
இந்நிலையில், வியாழக்கிழமை, பீகாரைச் சேர்ந்த சுதீர் சிங் மற்றும் காசியாபாத்தைச் சேர்ந்த ஹமித் ஆகிய இருவரை கைது செய்துள்ளனர். இவர்கள் இருவரும் ஷ்ரீஜீ பாலஸ் பகுதியிலுள்ள அவர்களது அலுவலகத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 22 போலி ஆதார் அட்டைகள், ஒரு பிரிண்டர், 3 செல்போன்கள், ஒரு கம்ப்யூட்டர் மற்றும் ரூ.4.24 லட்சம் ரொக்கம் ஆகியவை கைப்பற்றப்பட்டன.
குற்றவாளிகளிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன. மொத்தம் 7 பேர் இந்த குற்றச்செயலில் ஈடுபட்டு வந்துள்ளனர். அதில் 5 பேர் தற்போது தலைமறைவாகியுள்ளனர். இவர்கள் ‘Gulf Course’ என்ற பெயரில் ஃபேஸ்புக் கணக்கு ஒன்றை தொடங்கி, அதன்மூலம் கல்ஃப் நாடுகளில் வேலைவாய்ப்பை உருவாக்கி தருவதாக இளைஞர்களை கவர்ந்துள்ளனர். குறிப்பாக ஈராக், துபாய் மற்றும் பக்ரைன் ஆகிய நாடுகளில் வேலைவாங்கித் தருவதாகக் கூறியுள்ளனர். சமூக ஊடங்களில் தங்களை தொடர்புகொள்ளும் நபர்களை நம்பவைத்து, தங்கள் அலுவலகத்திற்கு நேரில் வருமாறு அழைத்துள்ளனர். அங்கு வைத்து அவர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு போலி விசா மற்றும் விமான டிக்கெட்டுகளை வழங்கியுள்ளனர். குறிப்பாக வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை வளர்க்க அவர்களுக்கு போலி மருத்துவ பரிசோதனைகூட செய்துள்ளனர்.
இப்படி சம்பாதித்த வருமானத்தில் ரூ. 60 லட்சத்தை கடந்த 3 மாதங்களில் தங்கள் வங்கிக்கணக்குகளில் அனுப்பியுள்ளனர். குற்றவாளிகள் இரண்டு பேரின் பெயரிலும் 11 வங்கிக்கணக்குகள் இருப்பதாகவும், அவற்றை தற்போது முடக்கியிருப்பதாகவும் காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
குற்றவாளிகளில் ஒருவரான சுதீர் 2020ஆம் ஆண்டு கொரோனா பொதுமுடக்கத்துக்கு முன்பு துபாயில் பிளம்பர் வேலை செய்துவந்துள்ளார். இந்தியா வந்த இவர் ஹமித்துடன் கைகோர்த்து இந்த குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளார். தலைமறைவாகியுள்ள 5 பேரை தேடும் பணிகளை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர். இதில் மாஸ்டர் மைண்டாக செயல்பட்ட ஹமித்திடம் போலீசார் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக இந்த குழுவானது வெவ்வேறு ஊர்களுக்குச் சென்று அங்கு இதுபோல் வெளிநாட்டு வேலை ஆசைகாட்டி நம்பவைத்து பணம் பறித்து வந்துள்ளது. அப்படி கடந்த 4 - 5 ஆண்டுகளில் 2000க்கும் மேற்பட்டோரை ஏமாற்றி, அவர்களிடமிருந்து ரூ. 2 கோடிக்கும் அதிகமான பணத்தை ஏமாற்றியுள்ளனர் என்றும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.