பெங்களூருவில் பெய்து வரும் கனமழை காரணமாக அங்குள்ள PHOENIX MALL தண்ணீரில் மிதக்கும் சூழல் ஏற்பட்டது. நகரத்தில் பெரும்பாலான இடங்களில் மழைநீர் கரைபுரண்டு ஓடுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
பெங்களூருவில் தொடர்ந்து பெய்து வரும் மழையால், நகரத்தின் பெரும்பாலான இடங்கள் வெள்ளக்காடாக காட்சியளித்தது.. மகாதேவபுரம், யெலஹங்கா மற்றும் வடக்கு பெங்களூரு பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் அப்பகுதி மக்கள் சிரமத்துக்குள்ளாகினர். குடியிருப்புகளிலும் தண்ணீர் புகுந்ததால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர்.
பெங்களூருவில் உள்ள PHOENIX MALL-லில் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் பார்க்கிங் பகுதி முழுவதும் தண்ணீரில் மூழ்கியுள்ளது. மழையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், மீட்புப் பணிகளை துரிதமாக மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
அதேபோல் காங்கிரஸ் அரசு மீது குற்றம்சாட்டுவதாக நினைத்து மாநிலத்தின் பெருமையை சீர்குலைக்க வேண்டாம் என்றும் இயற்கையை எப்படி கட்டுப்படுத்துவது என்றும் கேள்வி எழுப்பினார். ஆனால் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அதிகாரிகள் எடுத்து வருவதாகவும் சிவக்குமார் தெரிவித்தார்.