நீண்ட நேரம் காரை ஓட்டி ரத்த ஓட்டம் தடைபட்டதால் தொழிலதிபர் ஒருவர் உயிருக்கு போராடும் நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
வட இந்தியாவைச் சேர்ந்த 30 வயதான தொழிலதிபர் சவ்ரப் ஷர்மா. இவர் வேலை காரணமாக நீண்ட தூரம் கார் ஓட்டிச் சென்றுள்ளார். பயணத்தை முடித்து அலுவலகம் திரும்பிய பின் அவர் 2 முறை மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் " Pulmonary embolism " நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தனர். நுரையீரலுக்கு செல்லும் ரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பே இந்த நோயாகும்.
இது குறித்து தகவல் தெரிவித்துள்ள மருத்துவர்கள், ஆட்டோமேட்டிக் வகை காரினை நீண்ட தூரம் ஓட்டிய சவ்ரப், கால்களை நீண்ட நேரமாக அசைக்காமல் இருந்துள்ளார். மேலும் இறுக்கமான ஜீன்ஸ் உடையை அணிந்திருந்திருக்கிறார் .இதன் காரணமாக இரத்தஓட்டம் இயல்பாக இல்லாமல் போயுள்ளது. இதயத்திலிருந்து இரத்தம் வெளியேறுவதும் மீண்டும் இதயத்திற்கு இரத்தம் செல்வதும் ஒரு இயல்பான நிகழ்வு. கால்களை வெகு நேரம் அசைக்காமல் இருக்கும் போது ரத்த ஓட்டம் தடைபடும். இதனால் அவர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.
உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் வாய்ப்புள்ள இந்நிலை அவருக்கு ஏற்படக் காரணம் கால்களை வெகு நேரம் அசைக்காதிருந்தது. அவர் ஓட்டிய காரும் ஆட்டோமேட்டிக் வகை. முக்கியமாக " இறுக்கமான ஜீன்ஸ் உடையை அணிந்திருந்தார்.
இறுக்கமான ஜீன்ஸ் போன்ற உடைகளை அணியும்போது அது கால்களை அசைக்கும் தன்மையை முற்றிலும் குறைத்துவிடுகிறது என்பதால் எப்போதும் தளர்வான உடைகளை பயன்படுத்த வேண்டும். நமது நாட்டின் தட்பவெப்ப சூழலை புரிந்து கொண்டு அதற்கு ஏற்ற வகையிலான ஆடைகளையே அணிய வேண்டும். ஜீன்ஸ் போன்ற இறுக்கமான உடைகளை காற்றுப்புகாத வகையில் அணியும்போது தோல் பாதிப்பு, அரிப்பு, தோல் எரிச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்படும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்