ஸ்நாக்ஸ் வாங்குவதற்காக பல ஆண்டுகளாக ரயிலை நிறுத்தி வரும் ஓட்டுநரின் செயல் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கிறது.
பொதுவாக, பேருந்துகளில் வெளியூர் செல்லும்போது அதன் ஓட்டுநர்கள் வழியில் எங்கேயாவது ஓரிரு நிமிடங்கள் நிறுத்தி, தனிப்பட்ட தேவைகளுக்காக ஏதாவது வாங்கிச் செல்வதை பார்த்திருக்கிறோம். ஆனால், அவர்களின் செயலால் பெரிதாக யாருக்கும் பாதிப்பு ஏற்படாது. ஆனால், ராஜஸ்தானில் ஒரு ரயில் ஓட்டுநர் சிற்றுண்டி வாங்குவதற்காக ரயிலை தினமும் நிறுத்தி வருவதால், நூற்றுக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
அம்மாநிலத்தின் அல்வர் மாவட்டத்தில் உள்ள டவுட்பூர் பகுதியில் உள்ள ஒரு ரயில்வே கிராஸிங்கில் தினமும் காலை 9 மணிக்கு ஜெய்ப்பூர் - அல்வர் எக்ஸ்பிரஸ் ரயில் கடந்து செல்லும். இதற்காக 4 நிமிடங்களுக்கு முன்பாகவே கேட் மூடப்பட்டு விடும். வழக்கமாக, ரயில்வே கிராஸிங்கை எக்ஸ்பிரஸ் ரயில் கடக்க 10 நொடிகள் ஆகும். அதன் பிறகு பாதசாரிகளும், வாகன ஓட்டிகளும் தண்டவாளத்தை கடப்பார்கள். ஆனால், மேற்குறிப்பிட்ட அல்வர் ரயில்வே கிராஸிங்கில் வரும் எக்ஸ்பிரஸ் ரயிலின் ஓட்டுநர், அங்கு விற்கப்படும் 'கச்சோரி' எனும் உணவுப் பண்டத்தை வாங்குவதற்காக ரயிலை சில நிமிடங்கள் நிறுத்திவிட்டு செல்வதை வழக்கமாக்கி கொண்டிருக்கிறார்.
இதனால், அந்த கிராஸிங்கில் ஏற்கனவே 4 நிமிடங்கள் நிற்கும் வாகன ஓட்டிகள், ரயில் ஓட்டுநரின் இந்த பொறுப்பற்ற செயலால் கூடுதலாக 3 நிமிடம் வரை காத்திருக்க வேண்டியுள்ளது. காலை 9 மணிக்கு பள்ளி மற்றும் அலுவலகத்துக்கு செல்பவர்கள் இதனால் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில், ரயில் ஓட்டுநரின் இந்த செயலை அங்கிருந்த ஒருவர் தனது செல்போனில் படம்பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலானதை அடுத்து சம்பந்தப்பட்ட ரயில் ஓட்டுநர் உட்பட 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.