“கோமியம் குடித்துவிட்டு தயாராக இருங்கள். நான் இன்று மாலை அவையில் பேசுகிறேன்” என்று பா.ஜ.க.வினருக்கு ட்விட்டர் வாயிலாக திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா சவால் விட்டுள்ளார்.
மக்களவையில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பங்கேற்று பேசினார். அதில், “ஏழைகளுக்கு ஓர் இந்தியா, பணக்காரர்களுக்கு ஓர் இந்தியா. தமிழகத்தை உங்களால் வாழ்நாளில் ஒருநாளும் ஆளமுடியாது” என பல்வேறு மாநிலங்களை பற்றி பேசியது அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
மேலும் அவரது பேச்சுக்கு தமிழக பா.ஜ.க. தலைவர், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர், மத்திய அமைச்சர்கள், அமெரிக்க செய்தித் தொடர்பாளர் வரை பலரும் எதிர்வினையாற்றி வருகின்றனர். இந்நிலையில், திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா, பா.ஜ.க.வினருக்கு ட்விட்டரில் சவால் விடுத்திருப்பது புதிய அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.
அதில், அவர் கூறியிருப்பதாவது, “இன்று மாலை நான் மக்களவையில் குடியரசுத் தலைவர் உரை மீதான தீர்மானத்தின் போது பேசுகிறேன். பா.ஜ.க.வினரே, கற்பனைக் கதைகளைக் கட்டவிழ்க்கும் உங்களுடைய தாக்குதல் படையைத் தயாராக வைத்துக் கொள்ளுங்கள். வேண்டுமேனில் கோமியம் குடித்துவிட்டு தயாராக இருங்கள்” இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார். இந்த ட்வீட்டுக்கு பலரும் மிகவும் தைரியமானவர் என்று பாராட்டியுள்ளனர். எனினும், பா.ஜ.க. ஆதரவாளர்கள் சிலர், ஆன்டி இந்து என்று விமர்சித்துள்ளனர்.
மஹுவா மொய்த்ரா, கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் போதே தனது அனல் பறக்கும் பேச்சால் அவையை அதிர வைத்தவர். "அதிகார மமதை, வெறுப்பு, மதவெறி, பொய் ஆகியவற்றால் மறைந்திருக்கும் கோழைகள், இந்த விஷயங்களை வீரம் என்று கருதுகிறார்கள். இந்த அரசும், தனது பிரசாரத்தில் பொய்களை பரப்புவதன் மூலம் கோழைத்தனத்தை வீரம் என்று காட்டுவதை தங்களது மிகப்பெரிய வெற்றியாக கருதி வருகிறது" என்று பேசி பரபரப்பைக் ஏற்படுத்தினார். இந்நிலையில் இந்த முறையும் தனது பேச்சு குறித்த முன்னோட்டத்தை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.