மதுபானக் கடையின் முன்பு மாடுகளைக் கட்டி வைத்த பாஜக தலைவரால் பரபரப்பு ஏற்பட்டது.
மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இச்சூழலில், பாஜக மூத்த தலைவரான உமா பாரதி மத்தியப் பிரதேசத்தில் மதுபானக் கடைகளின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும் என்று கோரி தொடர் போராட்டம் நடத்தி வருகிறார். மதுபானக் கடைகளால் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாகக் அவர் குற்றம்சாட்டி வருகிறார்.
இந்நிலையில் நேற்று உமா பாரதி நிவாரி மாவட்டம் ஓர்ச்சா நகரில் அமைந்துள்ள ஒரு மதுபானக் கடையின் முன்பு, தெருவில் இருந்த மாடுகளைக் கட்டி வைத்துவிட்டு போராட்டம் செய்தார். அப்போது அவர், 'பால் குடியுங்கள்; மதுவை தவிருங்கள்' என்ற கோஷத்தை எழுப்பினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் இதே மதுபானக் கடையில் உமாபாரதி மாட்டுச் சாணத்தை அள்ளி வீசினார். கடந்த ஆண்டு மார்ச் மாதம் அவர் போபாலில் உள்ள ஒரு மதுபானக் கடை மீது கல் வீசினார்.
முன்னதாக, கடந்த சனிக்கிழமை போபாலில் உள்ள கோயில் ஒன்றுக்கு அருகில் இருந்த மதுபானக் கடைக்கு முன்பு அமர்ந்து உள்ளிருப்புப் போராட்டம் செய்தார். அப்போது அவர், ''விதிகளை மீறிச் செயல்படும் மதுக்கடைகள் இருக்கும் இடத்தில் பசுத் தொழுவத்தைத் தொடங்கப் போகிறேன். ராமர் பெயரில் அரசு உருவாக்கப்பட்டது. ஆனால், ராமர் கோயிலுக்கு அருகில் மதுக்கடைகள் திறக்கப்பட்டிருக்கின்றன'' என்று கூறினார். மத்தியப் பிரதேசத்தில் மதுவிலக்கு கோரி ஆளுங்கட்சியை சேர்ந்த தலைவரே அரசுக்கு குடைச்சல் கொடுத்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.