உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியில் மணமகளை, மணமகனின் நண்பர்கள் சிலர் நடனமாட இழுத்துச் சென்றதால், அப்பெண் திருமணத்தை நிறுத்திய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்த இந்த சம்பவத்தில், மணமகன் பரேலி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர், மணமகள் கண்ணாஜ் மாவட்டத்தைச் சேர்ந்தவர், இருவரும் முதுகலை பட்டதாரிகள். கடந்த வெள்ளிக்கிழமை மணமகள் மற்றும் அவரது குடும்பத்தினர் பெரிய திருமண விழாவிற்காக பரேலிக்கு வந்தனர். அந்த நிகழ்ச்சியில் மணமகனின் சில நண்பர்கள் மணப்பெண்ணை நடனமாடுமாறு மேடைக்கு அழைத்துசென்றனர், இதனால் இரு தரப்பினருக்கும் இடையே பரபரப்பான வாக்குவாதம் உருவானது.
இதைத் தொடர்ந்து திருமணத்தை ரத்து செய்துவிட்டு, மணமகள் தனது வீட்டிற்கு திரும்பி செல்ல முடிவு செய்தார். பின்னர் மணமகளின் குடும்பம் மணமகனின் குடும்பத்திற்கு எதிராக வரதட்சணை புகார் அளித்தது. இதனையடுத்து மணமகனின் குடும்பம் மணமகளின் குடும்பத்திற்கு திருமண செலவான ரூ 6.5 லட்சம் செலுத்த ஒப்புக் கொண்டதையடுத்து இரு தரப்பினரும் வழக்கு ஏதுமின்றி பிரச்னையை முடித்துக்கொண்டனர்.