இந்தியாவின் SARS-COV-2 மரபியல் ஆய்வு கூட்டமைப்பு (INSACOG) ஆலோசனைக் குழுவின் தலைவராக செயல்பட்டு வந்த மூத்த விஞ்ஞானி ஷாகித் ஜமீல் திடீரென ராஜினாமா செய்திருப்பது விமர்சனத்துக்கு வழிவகுத்துள்ளது. இதற்கான பின்னணி என சந்தேகிக்கப்படும் விஷயங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்
நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு கொரோனா தொற்றுநோயைக் கையாள்வதை கடுமையாக விமர்சித்த சில வாரங்களுக்குப் பிறகு, மூத்த வைராலஜிஸ்ட் டாக்டர் ஷாஹித் ஜமீல் இந்தியாவின் SARS-COV-2 மரபியல் ஆய்வு கூட்டமைப்பு (INSACOG) ஆலோசனைக் குழு தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்தியாவில் கொரோனா முதல் அலை வேகமாக பரவிய கடந்த ஆண்டு அரசாங்கத்தால் அமைக்கப்பட்டதுதான் இந்த இந்தியாவின் SARS-COV-2 மரபியல் ஆய்வு கூட்டமைப்பு (INSACOG) ஆலோசனைக் குழு. இந்த குழுவானது, தற்போது இந்தியாவில் உள்ள கொரோனா வைரஸின் பிறழ்ந்த விகாரங்களின் ஆய்வக மற்றும் தொற்றுநோயியல் கண்காணிப்புக்காக அமைக்கப்பட்டது. இதன் தலைவராக ஜமீல் பொறுப்பேற்றுக்கொண்டார்.
இந்தக் குழு மட்டுமில்லாமல், டாக்டர் ஜமீல் இந்தியாவின் மற்ற மூன்று பெரிய அறிவியல் அகாடமிகளான தேசிய அறிவியல் அகாடமி, இந்திய அறிவியல் அகாடமி மற்றும் இந்திய தேசிய அறிவியல் அகாடமி ஆகியவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினராக உள்ளார். அவருக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான சாந்தி ஸ்வரூப் பட்நகர் பரிசு வழங்கப்பட்டது. இது மருத்துவ அறிவியல் துறையில் இந்தியாவின் மிக உயர்ந்த விருதுகளில் ஒன்றாகும். இதேபோல், ஹெபடைடிஸ் பி மற்றும் இ வைரஸ்கள் மற்றும் மனித நோயெதிர்ப்பு குறைபாடு வைரஸ் (எச்.ஐ.வி) பரவுவதற்கான பண்புகள் மற்றும் வழிகளை டாக்டர் ஜமீல் அடையாளம் கண்டுள்ளார். இதன் காரணமாக எச்.ஐ.வி-1 துணை வகை சி-க்கு தடுப்பூசிகளை உருவாக்கும் பணியில் ஈடுபட்ட குழுவுக்கு அவர் தலைமை தாங்கினார்.
இந்த நிலையில்தான் டாக்டர் ஜமீல் மத்திய அரசு நியமித்த ஆலோசனைக் குழு மூலம் நாட்டில் கொரோனா தொற்றுநோய் குறித்து முக்கியமான கணிப்புகளை மேற்கொண்டு வந்தவர், தொற்றுநோயை மத்திய அரசு கையாண்ட விதம் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வந்தார்.
சமீபத்தில் கொரோனா குறித்து, 'தி நியூயார்க் டைம்ஸ்' பத்திரிகைக்கு பேட்டியளித்த அவர், ``இரண்டாவது அலை மே மாதத்தின் நடுப்பகுதியில் உச்சத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் இரண்டாவது அலை ஜூலை அல்லது ஆகஸ்ட் வரை நீடிக்கும். இது சுமார் 35 மில்லியன் உறுதிப்படுத்தப்பட்ட பாதிப்புகளை ஏற்படுத்தும் மற்றும் 500 மில்லியன் மதிப்பிடப்பட்ட நோய்த்தொற்றுகளுடன் முடிவடையும்.
மில்லியன் கணக்கான மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்றாலும், பாதிப்புகளை விட சோதனை மிக மெதுவான விகிதத்தில் அதிகரித்து வருவதால், அதிகபட்சமான பாதிப்புகளை இந்தியா துல்லியமாக அளவிட முடியாது. அதிகரித்த சோதனை மற்றும் நேர்மறை சோதனை செய்தவர்களை தனிமைப்படுத்துவதன் மூலம் பரவலைக் குறைப்பதே உடனடித் தேவை. தற்காலிக வசதிகளை அமைப்பதன் மூலமும், ஓய்வுபெற்ற மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை அணிதிரட்டுவதன் மூலமும், முக்கியமான மருந்துகள் மற்றும் ஆக்ஸிஜனுக்கான விநியோகச் சங்கிலியை வலுப்படுத்துவதன் மூலமும் சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும்.
கடந்த மார்ச் மாதத்தில், பல நாடுகளிடமிருந்து பெறப்பட்ட வைரஸ் மாதிரிகளுடன் இந்தியாவில் பரவி வரும் கொரோனா வைரஸை ஒப்பிடுகையில் அது உருமாறிய பி.1.617 வைரஸ் என்பது கண்டறியப்பட்டது. இது தொடர்பாக அப்போதே எங்கள் ஆலோசனை குழு மத்திய அரசை எச்சரித்தபோதும், அரசு இதில் அலட்சியமாக இருந்துவிட்டது.
கடந்த ஆண்டு, முதல் அலை ஏற்பட்டபோது கடுமையாக கட்டுப்பாடுகளை கடைபிடித்த மக்கள் மற்றும் அரசு அதன் பின்னர் அலட்சியத்தோடு நடந்துகொண்டனர். இதுவே இரண்டாம் அலை உருவாக முக்கியக் காரணம். இதைவிட இரண்டாம் அலைக்கு, தேர்தல் பிரசாரங்கள், மதக் கூட்டங்கள் போன்றவற்றில் அதிகளவிலான மக்களை ஒன்றுகூட அனுமதித்தது முக்கியக் காரணம்” என்று கடுமையாக விமர்சித்திருந்தார்.
‘தரவுகள் முற்றிலும் தவறானது’
இதேபோல் மோஜோ ஸ்டோரி விவாதத்தில் பங்கேற்றிருந்த டாக்டர் ஜமீல், "கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகள் மற்றும் இறந்தவர்களின் தரவு முற்றிலும் தவறானது. இந்தியாவுக்கான உண்மையான இறப்பு தரவு முற்றிலும் தவறானது. ஒரு மருத்துவமனையில் ஒரு படுக்கை அல்லது ஆக்ஸிஜன் சிலிண்டரைக் கூட பெற முடியவில்லை. இது மிகவும் கடினமான நேரம், ஆனால் சில முட்டாள்கள் உத்தரப் பிரதேச அரசு எவ்வளவு சிறப்பாக செயல்படுகிறது என்பதைப் பற்றி பேசுகிறார்கள். கொரோனா தடுப்பூசிகளை உலகமயமாக்க வேண்டும்" என்று பாஜக அரசை சாடும் விதமாக பேசியிருந்தார்.
'தி பிரின்ட்' செய்தித் தளத்தில் ஒரு கட்டுரை எழுதிய டாக்டர் ஜமீல், "தடுப்பூசிகள் பாதுகாப்பாக இல்லை என்று சிலர் நம்புவதால், தடுப்பூசி பாதுகாப்பு என்பது கவலைக்குரியது. சில மாநிலங்களில் தடுப்பூசி பற்றாக்குறைக்கு மத்திய அரசே காரணம். ஏனெனில் மக்கள் தொகையில் கணிசமான பகுதிக்கு தடுப்பூசி போட்ட பல நாடுகள் 2020 ஜூன் மாதத்தில் கொரோனாவை விரட்டி இருக்கின்றன. இந்தியா அதைச் செய்யவில்லை. இந்தியாவின் மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தியாளர்கள் தனியார் நிறுவனங்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். எனவே, நாங்கள் இப்போது முற்றிலும் தனியார் துறையைச் சார்ந்து இருக்கிறோம்" என்றும் அதில் பேசியிருந்தார்.
இப்படி அடுத்தடுத்து மத்திய அரசின் நடவடிக்கைகளை விமர்சித்திருந்தவர் தற்போது ராஜினாமா செய்யவும், இதன் பின்னணியில் மத்திய அரசு அழுத்தம் கொடுத்திருக்கலாம் என்று இந்தியாவின் முன்னணி ஊடகங்கள் சந்தேகங்கள் எழுப்பியுள்ளன. இந்த சந்தேகத்துக்கு டாக்டர் ஜமீலோ, மத்திய அரசோ இதுவரை வாய் திறந்து பதில் கொடுக்கவில்லை. இதனால் இந்த விவகாரம் தற்போது பேசுபொருளாக மாறியிருக்கிறது.
- மலையரசு