காதி மற்றும் கிராம தொழில் வாரிய ஆணையத்தின் சார்பில் ஜம்மு காஷ்மீரில் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டிருப்பதாக அந்த ஆணையத்தின் மாநில (ஜம்மு காஷ்மீர்) துணைத்தலைவர் ஹினா ஷாஃபி தெரிவித்துள்ளார்.
கடந்த 3 ஆண்டுகளில், காஷ்மீரில் புதிதாக சுமார் 35,184 காதி நிலையங்கள் உருவாக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அந்நிலையங்களுக்காக ரூ.748 கோடி மானியம் கிடைத்திருப்பதாகவும், அதன்மூலம் 3 லட்ச வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அவர் பேசுகையில், “உருவாக்கப்பட்ட நிலையங்கள் அனைத்திலும், பெண்களுக்கு வேலைவாய்ப்பிலும் பிற முக்கிய பதவிகளிலும் சமமான அளவு பங்கு தரப்பட்டது. அப்படி பெண்கள் வழிநடத்திய நிலையங்கள், மிக சுமூகமாகவே செயல்பட்டது. லாப நோக்கத்துக்கு அப்பாற்பட்டே பல முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பதால், மக்கள் அனைத்தையும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இன்று பல இளைஞர்கள் இங்கு பணியமர்த்தப்பட்டுள்ளனர். அவர்கள் இந்நிலையங்களை மிக அழகாக வழிநடத்தி செல்கின்றனர்.
ஜம்மு காஷ்மீரின் கலைநயம் என்பது இந்தியா மட்டுமன்றி, உலகளவில் பிரசித்தி பெற்றது. அதனால் அதை பாதுகாக்கவும் மேலும் வளர்க்கவும் அரசு மேலுமொரு திட்டத்தை செயல்படுத்த உள்ளது. அதற்காக சுமார் ரூ.21 கோடியில் பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. இதற்கு முன் பால் சார்ந்த பொருட்கள் விற்போருக்கு எங்களால் நிதி தரமுடியாத நிலை இருந்தது. இப்போது அவர்களுக்கும் உதவும் திட்டங்கள் உள்ளன.
இந்த புதிய வேலைவாய்ப்புகள், திட்டங்கள் மூலமாக கிராமங்களிலும் எங்களால் சேவையை செய்ய முடிகிறது. காதி மற்றும் கிராம தொழில் வாரிய ஆணையத்தின் நன்மைகளை உணர்ந்து, கிராமப்புற இளைஞர்கள் தங்கள் தொழிலில் சாதிக்கவும் முன்னேறவும் வேண்டும். யாரிடமோ வேலை செய்பவராக இளைஞர்கள் இருக்கக்கூடாது.; மாறாக யாருக்காவது வேலை கொடுப்பவராக இருக்கவேண்டும்” என்றுள்ளார்.