அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்க பயன்படுத்தப்பட்ட தேர்தல் பத்திர திட்டத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. தேர்தல் பத்திரம் தொடர்பான விவரங்களை வெளியிட வேண்டும் எனவும் பாரத ஸ்டேட் வங்கிக்கு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து தேர்தல் ஆணையத்திடம் தேர்தல் பத்திர விவரங்களை, பாரத ஸ்டேட் வங்கி சமர்ப்பித்தது.
இந்நிலையில், தேர்தல் பத்திரம் தொடர்பான புதிய தரவுகளை தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது. இந்த தரவுகள், தேர்தல் நிதிப்பத்திரங்கள் மூலமாக அரசியல் கட்சிகள் பெற்ற தொகையை குறிப்பிட்டு அக்கட்சிகளே தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பிய கடிதங்களின் தகவல்கள்.
இதில், சில கட்சிகள் தங்களது நன்கொடையாளர்களின் பெயர்களைக் குறிப்பிட்டுள்ளன. திமுக, அதிமுக, மதச்சார்பற்ற ஜனதா தளம் போன்ற கட்சிகள் தாங்கள் எந்த நிறுவனங்களிடம் இருந்து, எவ்வளவு நிதி பெற்றன என்ற தகவல்களை அதில் தெரிவித்துள்ளன. பாஜக, காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தாங்களுக்கு நிதிவழங்கிய நன்கொடையாளர்களின் பெயர்களைக் குறிப்பிடவில்லை. எந்தெந்த தேதிகளில், நிதிப் பத்திரங்கள் மூலம் நிதிபெற்றுள்ளன என்பதை மட்டும் குறிப்பிட்டுள்ளது.
ஆனால், சில வித்தியாசமான குறிப்பேடுகளும் காணப்படுகின்றன. பீகாரில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பிய கடிதத்தில், “யாரோ ஒருவர் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 3 தேதி, பாட்னாவில் உள்ள எங்களது தலைமை அலுவலகத்திற்கு வந்தார். சீலிடப்பட்ட கவரை கொடுத்துவிட்டுச் சென்றார். அதைத் திறந்துபார்த்த போது ஒரு கோடிக்கான 10 நிதிப்பத்திரங்கள் இருந்தது” என தெரிவித்துள்ளது.
ஐக்கிய ஜனதா தளம் தேர்தல் நிதிப்பத்திரங்கள் மூலமாக மொத்தம் ரூ.30 கோடிகளை நிதிகளாக பெற்றுள்ளது.
அதிலும் இரு நன்கொடையாளர்களை ஐக்கிய ஜனதா தள கட்சி குறிப்பிட்டுள்ளது. அதில், ராஜஸ்தானின் ஸ்ரீ சிமிண்ட் லிமிட்டட் ரூ. 10 கோடி மதிப்புள்ள நிதிப்பத்திரத்தை இரு பத்திரங்களாக 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16 ஆம் தேதி வழங்கியுள்ளது. பாரதி ஏர்டெல் லிமிட்டெட் நிறுவனம் 26/04/2019 அன்று ஒரு கோடி மதிப்புள்ள நிதிப்பத்திரம் ஒன்றை வழங்கியுள்ளது.