உடை மாற்றும்போது கூட மாணவிகள் விடுதி அறையின் கதவை மூடக் கூடாது என்று கேரள நர்சிங் கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கொல்லம் பகுதியில் உள்ள உபாசனா நர்சிங் கல்லூரி நிர்வாகம்தான் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது. மாணவிகள் செல்போன்களை பயன்படுத்துவது, ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவது உள்ளிட்ட விதிமீறல்களில் ஈடுபடுவதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக கல்லூரி நிர்வாகம் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. தவறான வீடியோக்களை மாணவிகள் பார்ப்பதாகக் கூறி இணைய வசதியும் அந்த கல்லூரியில் தடை செய்யப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்படுகிறது. கல்லூரி நிர்வாகத்தின் இந்த விதிகளை எதிர்த்து, மாணவிகள் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். கல்லூரி முதல்வர் ஜோசுகுட்டி பதவி விலகும் வரை போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை என்று கூறி தொடர் போராட்டத்தை மாணவிகள் நடத்தி வருகின்றனர்.