நடப்பாண்டில் இதுவரை இல்லாத அளவாக உள்நாட்டு விமான பயணம் 11 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக விமான போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
நவம்பர் மாதத்தில் மொத்தமாக ஒரு கோடியே 29 லட்சத்து 47 ஆயிரம் பயணிகள் விமானங்களில் பயணம் செய்துள்ளனர். இதுவே முந்தைய ஆண்டின் இதே மாதத்தில் ஒரு கோடியே 16 லட்சத்து 45 ஆயிரம் பயணிகள் விமான பயணம் செய்ததாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. கடும் நிதி நெருக்கடியில் சிக்கிய நாட்டின் மிகப்பெரிய தனியார் போக்குவரத்து நிறுவனமான ஜெட் ஏர்வேஸ், சென்ற ஏப்ரல் மாதத்தில் செயல்பாட்டை நிறுத்தியதையடுத்து விமானப் பயணங்கள் பெரிதளவு பாதிக்கப்பட்டது.
நடப்பு ஆண்டின் ஜனவரி மாதத்தில் உள்நாட்டு விமான பயணம் 9.1 சதவிகிதமாக இருந்தது. அடுத்து வந்த மாதங்களில் விமான பயணம் சரிவு கண்ட நிலையில், ஏப்ரல் மாதத்தில் மிகக் குறைந்த அளவாக 4.5 சதவிகிதமாக வீழ்ச்சி கண்டது. அடுத்து வந்த மாதங்களில் உள்நாட்டு விமானப் பயணங்கள் அதிகரித்து வந்த நிலையில், ஜூலை மாதத்தில் 6.19 சதவிகிதமாக வளர்ச்சி கண்டது. அடுத்தடுத்து வந்த மாதங்களில் விமானப் பயணம் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட நிலையில், சென்ற நவம்பர் மாதத்தில்தான் இந்த ஆண்டின் அதிகளவாக 11.8 சதவிகிதமாக வளர்ச்சி கண்டுள்ளது.