மூணாறு நிலச்சரிவில் போலீஸுக்கு உதவிய குவி... மீண்டும் எஜமானர் உடன் இணைந்த நெகிழ்ச்சி!

மூணாறு நிலச்சரிவில் போலீஸுக்கு உதவிய குவி... மீண்டும் எஜமானர் உடன் இணைந்த நெகிழ்ச்சி!
மூணாறு நிலச்சரிவில் போலீஸுக்கு உதவிய குவி... மீண்டும் எஜமானர் உடன் இணைந்த நெகிழ்ச்சி!
Published on

மூணாறு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த தனது எஜமானரைத் தேடி வந்த நாய் குவி, கிட்டத்தட்ட 8 மாதங்களுக்கு பின்பு மீண்டும் தன் எஜமானர் குடும்பத்துடன் இணைந்த நெகிழ்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கேரளா மாநிலம் மூணாறு பகுதியில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 63 பேர் உயிரிழந்தனர். இந்த தேடலின்போது குவி என்ற நாய் நிலச்சரிவில் சிக்கிய தனது எஜமானரின் குடும்பத்தைத் தேடி கிட்டத்தட்ட 8 நாள்கள் அங்கேயே இருந்தது. அப்போது தனது மோப்ப சக்தி மூலமாக, தன்னை வளர்த்த எஜமாரின் இரண்டரை வயது குழந்தை தனுஷ்காவின் சடலத்தை மீட்டது.

இந்நிலையில், இந்த மீட்பு பணிக்காக பெட்டிமுடி வந்த கேரளா மாநில மோப்ப நாய் பயிற்சியாளரான அஜித், குவியின் செயல்பாடுகளால் அதிகம் ஈர்க்கபட்டு அதற்கு உணவு அளித்து அதனோடு பழகி வந்தார். இரண்டு நாள்கள் பணி முடிந்து வீடு திரும்பிய அவர், குவியை தத்தெடுத்து வளர்க்க ஆசைப்பட்டு, இடுக்கி மாவட்ட ஆட்சியர் மற்றும் கேரள வன விலங்கு வாரியமான வனசமரச சமீதி அமைப்பிடம் அதுகுறித்தான கோரிக்கையை வைத்தார். அவருக்கு குவியினை வளர்க்க அனுமதி கிடைக்க, அதன்பின் இடுக்கி மாவட்ட காவல்துறையில் குவி இணைக்கப்பட்டது.

குவி, காவல்துறையால் தத்தெடுக்கப்பட்ட காலகட்டத்தில், குழந்தை தனுஷ்காவின் குடும்பத்தில் அவரது 72 வயதான பாட்டி பழனியம்மா என்பவரும், அவரது மகன் தீபன் என்பவர் மட்டுமே உயிருடன் இருந்தனர். இவர்கள் இருவரும் பலத்த காயங்களோடு பல மாதங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில், தற்போது நல்ல உடல்நிலையில் இருக்கின்றனர். இதனிடையே, சமீபத்தில் இவர்கள் இருவரும் தங்களின் நாய் குவியை தங்களுடன் சேர்த்துக்கொள்ள ஆசைப்படுவதாக ஊடகங்கள் வாயிலாக கூறியிருந்தனர்.

இது காவல்துறையினருக்கு தெரியப்படுத்த, அவர்களும் அதற்கான நடவடிக்கையை எடுக்கத் தொடங்கினர். அதன்படி, திருவனந்தபுரத்தில் உள்ள போலீஸ் தலைமையகத்தின் அதிகாரிகள் இந்தப் பிரச்னையில் தலையிட்டு, குவி தன் குடும்பத்துடன் மீண்டும் இணைவதற்கு வழி வகுத்தனர். வெள்ளிக்கிழமை காவல் அதிகாரிகள் குவியை அழைத்துக்கொண்டு பழனியம்மா வீட்டிற்கு வந்தனர். அப்போது பழனியம்மாவைப் பார்த்த குவி, ஓடிச்சென்று அவருடன் ஒட்டிக்கொண்டது. கிட்டத்தட்ட 8 மாதங்களுக்கு பிறகு குவி தனது எஜமானர் குடும்பத்துடன் இணைந்தது.

``வெள்ளிக்கிழமை காலை, நாங்கள் வசிக்கும் வீட்டிற்கு குவியை அதிகாரிகள் அழைத்து வந்தனர். நான் குவியின் பெயரை ஒரு முறை அழைத்தேன். அழைத்ததும் அவள் என்னிடம் ஓடி வந்து ஒட்டிக்கொண்டாள். மீண்டும் குவி எங்களுடன் இணையும் என்று எதிர்பார்க்கவில்லை. இதை சாத்தியமாக்கிய அனைவருக்கும் எப்படி நன்றி சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை.

குவியைத் திரும்பப் பெறுவது குடும்பத்தில் ஒருவரைத் திரும்பப் பெறுவது போன்று உள்ளது. குவி ஒரு நாய்க்குட்டியாக இருந்தபோது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வளர்க்கத் தொடங்கினோம். எங்களுக்கும் குழந்தைகளுக்கும் மிகவும் நெருக்கமாக குவி இருந்தது" என்று மீண்டும் இணைந்த சந்தோசத்தில் மூதாட்டி பழனியம்மா நெகிழ்ந்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com