நாய் ஒன்று தனது எஜமானரின் திருமணத்தில் பங்கேற்க துபாயில் இருந்து கேரளாவிற்கு விமானத்திலும், பின் சாலையிலும் 26 மணிநேரம் பயணித்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலம் புதுப்பள்ளியைச் சேர்ந்தவர் ரூபா குரியன். இவர் துபாயில் கடந்த 23 ஆண்டுகளாக பத்திரிகையாளராக பணியாற்றி வந்தார். இவரது கணவர் செரியன் குரியன் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். ரூபா குரியன் தனது மகள் மாளவிகா குரியனுடன் துபாயில் வசித்து வந்தார். ஸ்மர்ஃப் என்ற நாய் ஒன்று தனது ஒரு மாதத்திலிருந்து இவர்களுடன் வசித்து வருகிறது. தற்போது அந்த நாய்க்கு 7 வயது ஆகிறது.
கடந்த ஜூன் 4 ஆம் தேதி கொரோனா பொதுமுடக்கம் காரணமாக ரூபா குரியன் தனது மகள் மாளவிகா குரியனுடன் சொந்த ஊரான கேரளாவிற்கு திரும்பினார். அப்போது ஸ்மர்ஃப் நாய் இவர்களுடன் வருவதற்கு இயலாத சூழ்நிலை நிலவியுள்ளது. இதனால் துபாயில் உள்ள சகோதரி வீட்டில் நாயை விட்டுவிட்டு ரூபா தனது மகளுடன் ஊர் திரும்பினார்.
இந்நிலையில், மாளவிகாவுக்கு வரும் டிசம்பர் மாதம் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் கலந்து கொள்ள ஸ்மர்ஃப் நாய் விமானம் மற்றும் காரில் 26 மணிநேரம் பயணித்து துபாயில் இருந்து கேரளா வந்துள்ளது. இதற்காக அந்தக் குடும்பம் ஒரு லட்சத்து 75 ஆயிரம் செலவு செய்துள்ளது.
இதுகுறித்து ரூபா குரியன் கூறுகையில், “இந்த நாயை எனது மகளுக்கு அவரது தோழி ஒருவர் கொடுத்தார். மாளவிகாவுக்கு டிசம்பர் மாதம் திருமணம். அதில் ஸ்மர்ஃப் கலந்து கொள்ள வேண்டும் என அவர் விரும்பினார். பல்வேறு சோதனைகளுக்கு பிறகு ஸ்மர்ஃப் அபுதாபியில் இருந்து ஏர்வேஸ் விமானம் மூலம் புதன்கிழமை மதியம் 1.30 மணிக்கு பெங்களூரு வந்தது. அங்கிருந்து புதுப்பள்ளிக்கு காரில் அழைத்து வரப்பட்டது. அதனுடன் டிரைவர் தவிர வேறு ஒரு செல்லப்பிராணியை கையாள்பவர் ஒருவரும் உடன் வந்தார். 5 மணிநேரத்திற்கு ஒரு முறை கார் நிறுத்தப்பட்டு ஸ்மர்ஃப் சிறிது தூரம் வாக்கிங் சென்றது. ஸ்மர்ஃப் பயணத்தின்போது உணவு சாப்பிடவில்லை. என்னையும் மாளவிகாவையும் பார்த்தவுடன் மீண்டும் ஸ்மர்ஃப் உற்சாகமாகிவிட்டது” எனத் தெரிவித்தார்.