தனது உரிமையாளரை காப்பாற்றுவதற்காக பாம்புடன் சண்டையிட்டு ஒரு நாய் உயிரிழந்துள்ளது.
ஒடிசாவின் குர்டா மாவட்டத்தின் ஜாட்னியில் வசித்து வருபவர் அமன் ஷரிப். இவர் தனது பெற்றோர், பாட்டியுடன் அங்கு வசித்து வருகிறார். அவர் வீட்டில் டைசன் என்ற டால்மேஷன் வகை நாயையும் வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த திங்கள் கிழமை இரவு நாய் டைசன் வீட்டுக்கு வெளியே கடுமையாக குரைத்துக்கொண்டு இருந்துள்ளது. வெளியே வந்து பார்த்த போது டைசன் ஒரு பாம்பை கடித்துகொன்றுவிட்டு அருகிலேயே மயக்க நிலையில் நின்றுள்ளது.
இது குறித்து பேசிய அமன் ஷரிப், ''நான் வெளியே சென்று பார்த்த போது பாம்பை கடித்துக்கொன்று விட்டு அருகில் டைசன் நின்றிருந்தது. சிறிது நேரத்தில் டைசன் மயங்கியது. நான் டைசனை பரிசோதித்தேன். அதன் முகத்திலும், காலிலும் பாம்பு கடித்த தடம் இருந்தது. உடனடியாக அந்த நேரத்தில் கால்நடை மருத்துவமனைக்கு நான் போன் செய்தேன். ஆனால் மருத்துவமனை மூடப்பட்டு இருந்தது. தனியார் கால்நடை மருத்துவமனைகளும் திறந்திருக்கவில்லை. சிறிது நேரத்தில் டைசன் மயங்கிய நிலையிலேயே உயிரிழந்துவிட்டது'' என்று தெரிவித்தார்
இந்த சம்பவம் குறித்து பேசிய விலங்கியல் ஆர்வலரான சுவீண்டு மாலிக், ''மனிதர்களுக்கான மருத்துவமனை 24 மணி நேரமும் இயங்குவதைப் போல், கால்நடைகளுக்கும் 24 மணி நேர மருத்துவமனை தேவை. சரியான சிகிச்சை இருந்திருந்தால் நாய் டைசனை காப்பாற்றி இருக்கலாம்'' என்று தெரிவித்துள்ளார்.
தனது உரிமையாளரை காப்பாற்றுவதற்காக பாம்புடன் சண்டையிட்டு தன் உயிரைவிட்ட டைசனை விலங்கு ஆர்வலர்களும், நாய் பிரியர்களும் சமூக வலைதளங்களில் பாராட்டி வருகின்றனர்.