கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் அமைந்துள்ள கொச்சி நகரின் வைட்டிலா பகுதியில் கடந்த நவம்பர் 1-ஆம் தேதி அன்று அதிகாலை நடந்த ஃபோர்டு ஃபிகோ கார் விபத்தில் தென்னிந்திய அழகி பட்டம் வென்ற 25 வயது அழகி அன்சி கபீர் மற்றும் கேரள அழகிப் போட்டியில் கடந்த 2019-இல் இரண்டாவது இடம் பிடித்த 26 வயது அழகி அஞ்சனா ஷாஜன் என இருவரும் உயிரிழந்தனர். அவர்களுடன் காரில் பயணித்த மற்றொரு நண்பரும் உயிரிழந்தார். காரை ஓட்டி வந்த ரஹ்மான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விபத்துக்கு முன்னதாகவும், பின்னதாகவும் நடைபெற்ற சில நிகழ்வுகள் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி உள்ளது. இது கொலையா? விபத்தா? என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. அது தொடர்பான மர்மம் நிறைந்த முடிச்சுகளை போலீசார் அவிழ்க்காமல் உள்ளனர். இந்த வழக்கு விசாரணையை மேற்கொண்டு வந்த போலீசார் மெத்தன போக்குடன் செயல்பட்டு வந்ததாக சொல்லப்பட்ட நிலையில் புதிய விசாரணை அதிகாரிகள் அடங்கிய குழுவிடம் இந்த வழக்கு விசாரணை ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அழகிகள் கார் விபத்தில் சிக்கி மரணம் அடைய காரணம் மற்றொரு கார் அவர்களை விரட்டியதால் ஏற்பட்டிருக்கலாம் என போலீசார் விசாரணையை வேறு கோணத்தில் மாற்றி விசாரித்து வருகின்றனர்.
அழகிகள் பயணம் செய்த காரை விரட்டியதாக சொல்லப்படும் மற்றொரு காரில் பின் தொடர்ந்து வந்த சைஜூ என்பவர் கேரள உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார். அவரது மனுவில் மது அருந்திவிட்டு வாகனத்தை ஓட்ட வேண்டாம் எனவும், இரவு தங்கிவிட்டு செல்லுமாறும் தான் அழகிகள் பயணம் செய்த கார் டிரைவரிடம் சொல்லியதாக தெரிவித்துள்ளார் சைஜூ.
போலீசார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் AUDI கார் ஒன்று, அழகிகள் பயணம் செய்த காரை பின் தொடர்ந்து வந்ததை உறுதி செய்துள்ளனர். இரு கார்களும் விபத்து நடந்த நேரத்தில் இரண்டு முறை ஒன்றையொன்று முந்திச் சென்றது உறுதியாகி உள்ளது. அதே நேரத்தில் விபத்து நடந்த சில நிமிடங்களில் அந்த AUDI கார் மீண்டும் அதே இடத்திற்கு வருவதையும், அதில் இருந்து யாரோ ஒருவர் இறங்குவதையும் பார்த்துள்ளனர். இரு கார் டிரைவர்களும் ரேஸில் ஈடுபட்டனரா? என்ற சந்தேகமும் போலீசாருக்கு எழுந்துள்ளதாம்.
மறுபக்கம் அழகிகள் இரவு விருந்தில் கலந்து கொண்ட ஹோட்டல் நிர்வாகத்தின் செயல்பாடுகளும் பலமான சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்களிடம் அண்மையில் விசாரணை மேற்கொண்ட போலீசார், அழகிகள் விருந்தில் பங்கேற்ற தினத்தன்று பதிவான DVR காட்சிகள், ஹார்ட் டிஸ்க் மாதிரியான தடயங்களை அழித்ததை கண்டறிந்துள்ளனர். அதனால் அந்த ஹோட்டலின் உரிமையாளர் மற்றும் அங்கு பணியாற்றிய ஊழியர்கள் ஐந்து பேரும் புதன்கிழமை அன்று கைது செய்யப்பட்டுள்ளனர். போலீசார் தொடர்ச்சியாக அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தடயங்களை அழிக்க வேண்டிய காரணம் என்ன? என கேட்டு வருகிறார்களாம். கிட்டத்தட்ட விபத்து நடைபெற்று 17 நாட்கள் கடந்த நிலையில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த கைது நடவடிக்கை குற்றவாளிகளை தப்ப செய்யும் வகையில் இருப்பதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்த கைது நடவடிக்கை கூட மக்களின் தொடர் போராட்டத்தால் போலீசார் மேற்கொண்டுள்ளதாக சொல்லப்படுகிறது. வளர்ந்து வந்த இரண்டு மாடல் அழகிகளின் உயிரை பறித்துள்ளது கேரளாவில் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதையும் படிக்கலாம் : 'ஆப்' இன்றி அமையா உலகு 10: Water Reminder - தண்ணீர் பருக நினைவூட்டும் அசத்தல் ஆப்!