தெலங்கானாவில்ன் பிரசவ வலியால் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணிக்கு பணியில் இருந்த மருத்துவரிடம் தொலைப்பேசியில் அறிவுரைகளை கேட்டு இரண்டு செவிலியர்கள் பிரசவம் பார்த்ததால் குழந்தை உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மே 17 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) அன்று தெலங்கானா மாநிலம், மஹ்பூபாபாத் மாவட்டத்தில் உள்ள மரிபேடா மண்டலம் குண்டேபுடியைச் சேர்ந்த காசிரெட்டி கசிர் ரெட்டி என்ற கர்ப்பிணி பிரசவ வலியால் வாரங்கலில் உள்ள வர்த்தண்ணாப்பேட்டை சமூக சுகாதார மையத்தில் (CHC) அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அப்போது, பணியில் இருந்த மானஷா ரெட்டி என்ற மருத்துவர், வலியில் வந்த கர்ப்பிணியை பார்க்காமல், பணியில் இருந்த செவிலியர்களை கொண்டு அப்பெண்னை கவனித்து கொள்ளும்படி கூறிவிட்டு மருத்துவமனையைவிட்டு வெளியேறியுள்ளார். இதனையடுத்து, சில மணி நேரத்திற்கு பிறகு ஸ்ரீஜாவிற்கு பிரசவ வலி அதிகரித்துள்ளது. இந்தநிலையில், இவரை கவனித்து கொண்டிருந்த செவிலியர்கள் சுனிதா மற்றும் சுபத்ரா ஆகியோர் ஸ்ரீஜாவின் உடல்நிலை குறித்து மருத்துவர் மானசா ரெட்டியிடம் தெரிவித்துள்ளனர்.
இதனால், மருத்துவர் மானசா, கர்ப்பிணிக்கு நார்மல் டெலிவரி செய்யும்படி, ஒரு சில அறிவுறுத்தல்களை தொலைபேசியில் வழங்கியுள்ளார்.இதனை கேட்ட செவிலியர்களும் உடனடியாக பிரசவம் நிகழும் அறைக்கு ஸ்ரீஜாவை கொண்டுசென்று மருத்துவர்களின் அறிவுரையின் பேரில் பிரசவம் பார்த்துள்ளனர்.
இந்நிலையில், ஸ்ரீஜாவிற்கு ஆண் குழந்தை பிறந்தது. ஆனால், குழந்தையை பெற்றோர்களிடத்தில் கொடுக்காமல்,உடனடியாக ’பரிசோதனை செய்ய வேண்டும்’ என்று கூறி எம்ஜிஎம் மருத்துவமனைக்கு மாற்றியுள்ளனர். இதனையடுத்து சிகிச்சை பெற்று வந்த குழந்தை, சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டது என்று தெரிவித்துள்ளனர்.மேலும், தாயின் உடல்நிலையும் மோசமாக உள்ளது என்று தெரிவித்துள்ளனர்.
இதனால், ஆத்திரமடைந்த குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், குழந்தையின் தந்தை நரேஷ் இது குறித்து தெரிவிக்கையில், "செவிலியர்கள் வலுகட்டாயமாக பிரசவம் செய்துள்ளனர். அறுவை சிகிச்சை செய்து குழந்தையை வெளியில் எடுக்க நாங்கள் வலியுறுத்தினோம். ஆனாலும் ,அவர்கள் அதை செய்யவில்லை. குழந்தையின் இறப்பிற்கு மருத்துவமனை ஊழியர்களின் அலட்சியமே காரணம்” என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில்,குழந்தையின் இறப்பிற்கு காரணமாக இருந்த மருத்துவர் மானசா ரெட்டி, செவிலியர்கள் சுனிதா, சுபத்ராவின் மீது குழந்தையின் தந்தை போலிஸில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து, இவர்களின் மீது ஐபிசி பிரிவு 304 (ஏ) இன் கீழ் வழக்குப்பதிவு செய்து தற்போது விசாரணையை காவல்துறையினர் துவங்கியுள்ளனர். மருத்துவரின் இத்தகைய அலட்சியம் ஒன்றும் அறியாத குழந்தையின் உயிரை பறித்துள்ளது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.