உத்திர பிரதேசத்தில் போலி மருத்துவ சான்றிதழ் மூலம் 10 ஆண்டுகளாக மருத்துவம் பார்த்து வந்த போலி மருத்துவரை போலீசார் கைது செய்தனர்.
உத்திரபிரதேசம் பாக்பத் மாவட்டத்தின் சப்ரவுலியை சேர்ந்தவர் ஓம்பால் சர்மா. இவர் இந்திய விமானப்படையில் மருத்துவ உதவியாளராக பெங்களூருவில் பணியாற்றியுள்ளார். அப்போது ராஜேஷ் என்ற அறுவை சிகிச்சை மருத்துவரின் கீழ் வேலை பார்த்து வந்துள்ளார். இதனால் அறுவை சிகிச்சை செய்வதை கற்றுக்கொண்ட ஓம்பால் சர்மா, ராஜேஷின் சான்றிதழ்களை நகல் எடுத்து போலி மருத்துவ சான்றிதழ் தயாரித்துள்ளார்.
இதன்மூலம் சஹரான்பூர் மாவட்டத்தின் தியோபந்த் நகரில் ஒரு மருத்துவமனையை தொடங்கி கடந்த 10 ஆண்டுகளாக நடத்தி வந்துள்ளார். மேலும் கர்நாடக மருத்துவ கவுன்சிலில் பதிவும் செய்துள்ளார். தொடர்ந்து அரசு மருத்துவமனையில் ஒப்பந்த மருத்துவராகவும் வேலை பார்த்து வந்துள்ளார்.
இதையடுத்து இந்திய மருத்துவ சங்க உறுப்பினர்களுக்கு ஓம்பால் மீது சந்தேகம் வர போலீசில் புகார் அளித்தனர். விசாரணையில் ஓம்பால் போலி மருத்துவர் என்பது தெரியவந்தது. மேலும் அவர் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சையை செய்துள்ளார் என்பதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.