உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் பல "ஆண்" சிங்கங்கள் வீட்டிலிருந்தபடியே அலுவலகப் பணியையும் வீட்டு வேலையும் செய்து வருகின்றனர். சரி, அப்போது நிஜ சிங்கங்கள் என்ன செய்துகொண்டிருக்கின்றன என்றால் அவையெல்லாம் உயிரியல் பூங்காவில் நிம்மதியாக குறட்டை விட்டுத் தூங்கி வருகின்றன. சிங்கம் கர்ஜிக்கத்தானே செய்யும் குறட்டை விடுமா என்று கேட்டால் அதற்கு நடிகர் வடிவேலு பாணியில் "அது போன மாசம்" என்றுதான் கூறவேண்டும்.
ஊரடங்கு காரணமாக நாட்டின் பல்வேறு உயிரியல் பூங்காவுக்குக் காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்படும் விலங்குகளுக்கு மட்டும் உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது. எப்போதும் மனிதர்களைக் கூட்டம் கூட்டமாகப் பார்த்துப் பழகிய விலங்குகளுக்கு இப்போது மிகவும் போர் அடிக்கிறது என்றே கூற வேண்டும். எனவே இப்போது செய்வதறியாது ஓய்வு எடுத்துக்கொண்டு இருக்கின்றன. இப்படிதான் ஒரு சிங்கம் நன்றாக குறட்டை விட்டபடி தூங்கிக்கொண்டு இருக்கிறது.
அப்படியொரு வீடியோவை வனத்துறை அதிகாரி சுசாந்தா நந்தா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் " ராஜா தூங்கும்போது விடும் குறட்டை அது கர்ஜிப்பதைக்காட்டிலும் சத்தமாக இருக்கும். பொதுவாக ஒரு ஆண் சிங்கம் காட்டில் நாள் ஒன்றுக்கு 18 முதல் 20 மணி நேரம் வரை தூங்கும். இது உயிரியல்ல பூங்காவில் குறைவுதான். பெண் சிங்கங்கள் தனது குட்டிகளைப் பராமரிக்க வேண்டும் என்பதால் 12 மணி நேரம் மட்டுமே தூங்கும். ஆனால் இங்கே இந்த ராஜா ஒரு நீண்ட கனவில் இருக்கிறார்" என விவரித்துள்ளார்..