அமெரிக்காவில் அதிபர் தேர்தலுக்கான பரப்புரை சூடு பிடித்துள்ள நிலையில் நம் கட்சியின் பெயரை பயன்படுத்த வேண்டாம் என வெளிநாடுகளில் உள்ள பா.ஜ.க-வை சேர்ந்த நண்பர்களிடம் எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளார் பாரதிய ஜனதா கட்சியின் வெளியுறவு விவகாரங்கள் துறையின் பொறுப்பாளர் விஜய் சவுத்திவாலே.
அமெரிக்காவில் உள்ள பா.ஜ.க-வின் ஓவர்சீஸ் பிரெண்ட்ஸ் ஆப் BJP (OFBJP) நண்பர்களுக்கு கடிதம் எழுதியுள்ள அவர் ‘ஒரு நாட்டின் குடிமகனாக தேர்தலில் பங்கேற்பது அவர்களது கடமை. அதே நேரத்தில் ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி என இரண்டு கட்சியையும் நீங்கள் தனிப்பட்ட முறையில் ஆதரித்து கொள்ளலாம். ஆனால் கட்சியின் பெயரை பயன்படுத்த வேண்டாம்’ எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் அமெரிக்க தேர்தலில் துணை அதிபர் வேட்பாளராக இந்தியாவை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ் போட்டியிடுவது தங்களுக்கு மகிழ்ச்சி தான் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் அமெரிக்காவின் வெள்ளைமாளிகையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தங்களுக்கு இந்திய மக்களிடம் பலத்த ஆதரவு இருப்பதால் இந்தியர்களின் ஓட்டு எங்களுக்கே என தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.