ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த 8ஆம் தேதி சுமார் 450க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சென்ற மீனவர்கள் மீன்பிடித்துவிட்டு, மீண்டும் கரை திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர், எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி அலெக்ஸ் மற்றும் அந்தோணி சசிக்குமார் ஆகியோருக்கு சொந்தமான விசைப் படகுகளில் இருந்த 19 மீனவர்களை கைது செய்தனர்.
வரும் 22ஆம் தேதி வரை அவர்களுக்கு நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது. இந்நிலையில், மீனவர்களையும் படகுகளையும் விடுவிக்கக் கோரி ராமேஸ்வரத்தில் சக மீனவர்கள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 750க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையில் நிறுத்தப்பட்டன. 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீன்பிடித் தொழிலாளர்கள் வேலைக்கு செல்லாமல் போராட்டத்தில் பங்கேற்றனர். போராட்டத்தால் சுமார் 5 கோடி முதல் 6 கோடி ரூபாய் வரை வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழக மீனவர்களின் பிரச்னை மக்களவையில் எதிரொலித்தது. "காப்பாற்று காப்பாற்று தமிழக மீனவர்களை காப்பாற்று" என திமுக எம்.பி.க்கள் மக்களவையில் முழக்கங்களை எழுப்பினர்.
நாடாளுமன்றக் கூட்டத் தொடரின் இறுதி நாளிலாவது தமிழக மீனவர்களின் பிரச்னை குறித்து பேச அனுமதி தாருங்கள் என்ற திமுக எம்.பி. க்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இதனால் முழக்கம் எழுப்பியவாறே திமுக எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்ததாக அக்கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர். பாலு தெரிவித்துள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் தமிழக மீனவர்கள் 3,076 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். 534 படகுகள் சிறைபிடிக்கப்பட்டுள்ளன. இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுதலை செய்யக் கோரி, பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கும் பலமுறை கடிதம் எழுதியுள்ளார். இதுவரை நடவடிக்கை எடுக்கப்படாத சூழலில், மத்திய அரசைக் கண்டித்து வரும் 11ஆம் தேதி ராமேஸ்வரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த திமுக திட்டமிட்டுள்ளது.