தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி திமுக மக்களவை குழுத்தலைவர் டி.ஆர் பாலு தலைமையில் திமுக எம்.பி-கள் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சரை சந்தித்து முறையிட்டனர்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த டி ஆர் பாலு, “இந்திய தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதும், அடித்து துன்புறுத்துவதும், மீன் வளங்களை அபகரிப்பதும், படகுகளை சேதப்படுத்துவதும் போன்ற செயல்களில் இலங்கை கடற்படை ஈடுபட்டு வருகிறது.
இதுவரை 68 மீனவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்; இவர்கள் உரிய நேரத்தில் திரும்புவார்களா? என்ற நிலை உள்ளது. அதனால் அனைத்து திமுக உறுப்பினர்களும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கரை சந்தித்து விடுதலை செய்ய இலங்கை அரசை வலியுறுத்துமாறு கோரிக்கை வைத்துள்ளோம். ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் ஜெய் சங்கர் கூறினார்” என தெரிவித்தார்.
மேலும், தமிழகத்தில் நீட் தேர்வு விலக்கு அளிக்க கோரி தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதனை குடியரசுதலைவருக்கு அனுப்பி வைக்க கூறி ஆளுநரிடம் சமர்பிக்கப்பட்டது. ஆனால், இதுவரை ஆளுநர் குடியரசுதலைவருக்கு அனுப்பவில்லை. ஆளுநர் சட்ட விதிகளுக்கு எதிராக செயல்படுகிறார். இதற்கு உரிய நடவடிக்கை மத்திய அரசு எடுக்க வேண்டும் என மக்களவையில் பேசியதாக தெரிவித்த டி.ஆர் பாலு, அதிமுக ஆட்சியில் நீட் தேர்வுக்கு எதிராக சட்டம் இயற்றப்பட்டதே மக்களுக்கு தெரியாமல் இருந்த நிலையில் திமுக அரசு தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இவை குறித்து குடியரசு தலைவரை அனைத்து கட்சி தலைவர்களும் கூட்டாக சந்திக்க நேரம் கேட்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.