நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதல், மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் மோடி விளக்கமளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால் இரு அவைகளிலும் இதற்கு அனுமதி மறுக்கப்பட்டு வருவதால், தொடர்ந்து அமளி ஏற்பட்டு வருகிறது. அத்துடன் அவைகளும் ஒத்திவைக்கப்பட்டு வருகின்றன. இதற்கிடையே எதிர்க்கட்சிகள் பிரதமர் மோடி தலைமையிலான அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை நேற்று கொண்டு வந்தனர். இந்த தீர்மானத்தின் மீது 2வது நாளாக இன்றும் (ஆகஸ்ட் 9) விவாதம் நடைபெற்றது.
இன்றைய நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது திமுக எம்.பி. கனிமொழி உரையாற்றினார். அவர், ”உச்சநீதிமன்றம் தலையிட்டு ஒரு மாநிலத்தைக் காப்பாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. ’டபுள் எஞ்சின் அரசு’ எனப் பெருமை பேசும் பாஜக, மணிப்பூர் விவகாரத்தில் விளக்கம் தராதது ஏன்? மணிப்பூர் மகளிர் ஆணையமும் தேசிய மகளிர் ஆணையமும் வேடிக்கை பார்ப்பவையாகத்தான் உள்ளது.
மணிப்பூரில் படுகொலைகளைத் தடுக்க மாநில அரசும் மத்திய அரசும் தவறிவிட்டன. 3 மாதங்களாக மணிப்பூரில் நடக்கும் கலவரத்தைத் தடுக்க பிரதமர் மோடி தவறிவிட்டார். மணிப்பூரில் முகாம்களில் தங்கவைப்பட்டுள்ள மக்கள் மிகவும் அவலமான நிலையில் உள்ளனர். ’மணிப்பூர் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களை, மணிப்பூர் முதல்வரோ, பிரதமரோ ஏன் காண வரவில்லை’ என சிறுமி ஒருவர் என்னிடம் கேட்டார்.
மணிப்பூரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு காவல்துறையினர் எந்த உதவியும் செய்யவில்லை. 161 ஆயுதப்படையினர் அங்கிருந்தும் வன்முறையைத் தடுக்கவில்லை. இறந்தவர்களின் உடல்கள்கூட உறவினர்களுக்குக் கிட்டவில்லை
பாஜக ஆட்சியில் விலைவாசி மட்டும் உயரவில்லை, பெண்களுக்கு எதிரான குற்றங்களும் அதிகரித்துள்ளது. மணிப்பூரில் அமைக்கப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான நிவாரண முகாமில் போதிய வசதிகளோ, உணவு, குடிநீரோ இல்லை. மணிப்பூரில் நிவாரண முகாம்கள் சுகாதாரமற்றதாக, வாழத் தகுதியற்ற வகையில் உள்ளது.
நாட்டில் ஏராளமானோர் வேலை இல்லாமல் உள்ள நிலையில், மத்திய அரசு காலிப் பணியிடங்களை நிரப்ப முன்வரவில்லை. குறிப்பாக ரயில்வே துறையில் பணியிடங்களை நிரப்பாமல் உள்ளது.
நாடாளுமன்றத்தில் செங்கோலை வைத்து, ’அது சோழ மன்னனுடையது’ என்றீர்கள். கண்ணகியின் கோபத்தால் பாண்டியனின் செங்கோல் தகர்ந்த கதை தெரியுமா உங்களுக்கு? எங்கள் மீது இந்தியை திணிப்பதை விட்டுவிட்டு சிலப்பதிகாரத்தைப் படியுங்கள். அதில் உங்களுக்கான பாடம் நிறைய உள்ளது.
தமிழ்நாட்டின் வரலாறு பற்றி பிரதமர் மோடிக்கு தெரியுமா? மணிப்பூர் மக்களை பிரதமர் நேரில் சந்தித்து நீதியை நிலைநாட்டவேண்டியது அவசியம். மணிப்பூர் வன்முறையில் 170க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.
மகாபாரதத்தில் திரெளபதியின் ஆடை கழற்றப்பட்டது பற்றி பாஜகவினர் பேசுகிறார்கள். திரெளபதியைப் போலத்தான் மணிப்பூர் பெண்களும் தங்கள் ஆடைகள் கழற்றப்படும்போது ஏதேனும் ஒரு கடவுளை வேண்டியிருப்பார்கள். ஆனால் அவர்களைக் காப்பாற்ற கடவுளும் வரவில்லை, அரசும் வரவில்லை.
மகாபாரதம் நன்கு படித்தவர்களுக்கு தெரியும், குற்றம்செய்தவர்களுக்கு மட்டுமல்ல, அதை அமைதியாக வேடிக்கை பார்த்தவர்களும் தண்டிக்கப்பட்டனர். ஹத்ராஸ், கத்துவா, உன்னாவ், பில்கிஸ் பானு, மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் ஆகியவை நடந்தபோது அமைதியாக இருந்தவர்களை இந்தியாவின் தாய்மார்கள் தண்டிப்பார்கள். ஆளும் கூட்டணிக்கு மக்கள் நல்ல பாடம் கற்பிப்பார்கள்” என ஆவேசமாகப் பேசினார்.