தயாநிதிமாறனின் பழைய வீடியோ க்ளிப்பை ஷேர் செய்து விமர்சிக்கும் பாஜக தலைவர்கள்! தேஜஸ்வி சொன்னது என்ன?

திமுக எம்.பி. தயாநிதி மாறன் பீகார், உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் தமிழகத்தில் வேலை செய்வது தொடர்பாக பேசிய காணொளி தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தேஜஸ்வி, தயாநிதி
தேஜஸ்வி, தயாநிதிpt web
Published on

பாஜகவின் தேசிய செய்தித் தொடர்பாளர் ஷெஹ்சத் பூனாவல்லா திமுக எம்.பி. தயாநிதி மாறன் பேசிய வீடியோ க்ளிப் ஒன்றை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.

தயாநிதி மாறன்
தயாநிதி மாறன்PT

அந்தப் பதிவில் தயாநிதிமாறன் பேசுகையில், “ஆங்கிலம் தெரிந்த காரணத்தால் ஐடி கம்பெனியில் கை நிறைய சம்பளம் வாங்கிககிறார்கள். இந்தி இந்தி என்று சொன்னார்கள். உங்களுக்கு நன்றாக தெரியும். இன்று கட்டடங்களைக் கட்டுவது யார்? உத்திரப்பிரதேசத்தில் இந்தி மட்டும் படிப்பவர்கள் தான், பீகாரில் இந்தி மட்டும் படிப்பவர்கள் தான் இங்கே வந்து தமிழைக் கற்றுக் கொண்டு நமக்கு வீடுகளை கட்டித் தருகின்றனர். சாலையைப் பெருக்கின்றனர், கழிவறைகளைக் கழுவுகின்றனர். இது தான் இந்தி படித்தால் நிலைமை” என்று பேசியுள்ளார்.

இந்த காணொளியைப் பகிர்ந்துள்ள ஷெசாத் பூனவல்லா இரு மாநிலங்களைச் சேர்ந்த INDIA கூட்டணியின் தலைவர்களிடம் கேள்வியை எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மீண்டும் ஒருமுறை பிரித்தாளும் விளையாட்டை விளையாட முயற்சிக்கின்றனர். முதலில் ராகுல் காந்தி வட இந்திய வாக்காளர்களை அவமதித்தார். பின் ரேவந்த் ரெட்டி பீகாரை அவமதித்தார். பின் திமுக எம்.பி. செந்தில் குமார் கோமூத்ரா மாநிலங்கள் என்றார். இப்போது தயாநிதிமாறன் இந்தி பேசுபவர்களையும் வட மாநிலத்தையும் அவமதிக்கிறார்.

ஹிந்துக்களையும் சனாதனத்தையும் அவமதிப்பது, பிரித்தாளும் கொள்கையை தனது டிஎன்ஏவில் கொண்டுள்ளது. நிதிஷ் குமார், தேஜஸ்வி யாதவ், லாலு யாதவ், காங்கிரஸ், சமாஜவாதி அகிலேஷ் யாதவ் ஆகியோர் இது நடக்கவில்லை என்று பாசாங்கு செய்வார்களா? அவர்கள் எப்போது ஒரு நிலைப்பாட்டை எடுப்பார்கள்?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

பாஜகவின் பாட்னா எம்.பி. ரவிஷங்கர் ப்ரசாத் இது குறித்து கூறுகையில், “பீகாரை அவமதிப்பதை திமுக தலைவர்கள் நிறுத்த வேண்டும். INDIA கூட்டணியில் அங்கம் வகிக்கும் நிதிஷ்குமாரின் கீழ் மாநிலத்தின் நிலைமை காரணமாக பீகார் மக்கள் அங்கு செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்” என தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள பீகார் துணை முதல்வரும் ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவருமான தேஜஸ்வி யாதவ், “இது கண்டிக்கத்தக்கது. மற்ற மாநிலங்களைச் சேர்ந்த தலைவர்கள் எந்த கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் இதுபோன்ற கருத்துக்களை கூறுவதை தவிர்க்க வேண்டும். மற்ற மாநில மக்களை மதிக்கிறோம். அதையே எதிர்பார்க்கிறோம். இது போன்ற கருத்துக்களை கூறக்கூடாது” என தெரிவித்துள்ளார்.

பாஜகவைச் சேர்ந்த அமித்மாளவியா இவ்விவகாரம் குறித்து தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்ததாவது, “உத்திரப்பிரதேசம் மற்றும் பீகாரில் இருந்து வரும் ஹிந்தி பேசும் மக்கள் தமிழ்நாட்டில் கழிவறைகளை சுத்தம் செய்வதாக INDIA கூட்டணிக் கட்சியின் தலைவரும் திமுக எம்.பி.யுமான தயாநிதிமாறன் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் மற்றும் ஜனதா தளத்தின் நிலைப்பாடு இதுதான என்று நிதிஷ்குமாரும் ராகுல்காந்தியும் விளக்க வேண்டும். INDIA கூட்டணியின் பிளவுபடுத்தும் நிகழ்ச்சிநிரம் முழுபலத்துடன் வெளிப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com