எதிர்வரும் குடியரசு தலைவர் தேர்தலில் திமுகவின் நிலைப்பாடு குறித்து கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன், டி.ஆர். பாலு உள்ளிட்ட முன்னணி தலைவர்களுடன் அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனை மேற்கொண்டார்.
முன்னதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடிதமொன்றை எழுதியிருந்தார். அக்கடிதம் வழியாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட 22 அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு, வரும் 15-ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்குமாறு மம்தா அழைப்பு விடுத்திருந்தார். எதிர்க்கட்சிகள் சார்பாக குடியரசுத் தலைவர் தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக அந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என மம்தா பானர்ஜி தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், காங்கிரஸும் தனது கூட்டணிக் கட்சிகளுடன் அதே 15-ம் தேதி டெல்லியில் ஆலோசனை செய்ய திட்டமிட்டுள்ளது. எனவே, இதில் எந்தக் கூட்டத்தில் திமுக கலந்து கொள்ளும் என்பது குறித்து அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.
திமுகவுக்கு 133 எம்எல்ஏக்கள், மக்களவை, மாநிலங்களை ஆகிய இரண்டிலும் மொத்தம் 34 எம்.பி.க்கள் இருக்கிறார்கள். கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரான மீரா குமாருக்கு ஆதரவு தெரிவித்து திமுக வாக்களித்தது குறிப்பிடத்தக்கது.