திமுக பொதுச் செயலாளர் க. அன்பழகனின் இறுதிச் சடங்கில் பிரசாந்த் கிஷோர் கலந்து கொண்டது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
திமுகவின் பொதுச்செயலாளராக இருந்த க.அன்பழகன் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 24ஆம் தேதி அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று இரவு 8 மணியளவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அப்போலோ மருத்துவமனைக்கு விரைந்து அன்பழகன் உடல்நிலை குறித்து விசாரித்தார்.
நள்ளிரவு திமுகவின் பொதுச்செயலாளராக இருந்த க.அன்பழகன் தனியார் மருத்துவமனையில் இயற்கை எய்தினார். இரவு 1 மணியளவில் உயிர்ப் பிரிந்ததாக அறிவிக்கப்பட்டது. இந்தச் செய்தி திமுகவினரை சோகத்தில் ஆழ்த்தியது.
இதனிடையே அவரது மறைவிற்கு திமுகவினர் மட்டுமின்றி பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்தனர். சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள வீட்டில் அன்பழகனின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. அவரது உடலுக்கு திமுக எம்பி கனிமொழி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, நடிகர் ரஜினிகாந்த் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.
இதேபோல் நடிகர் சத்யராஜூம் நேரில் அஞ்சலி செலுத்தினார். காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ். அழகிரி, அந்த கட்சி எம்பிக்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி, டி.கே.ரங்கராஜன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் அன்பழகனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இதையடுத்து இன்று மாலை அன்பழகனின் உடல் கீழ்ப்பாக்கத்திலுள்ள அவரது வீட்டிலிருந்து ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு வேலங்காடு மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இந்நிலையில் திமுகவுடன் தேர்தல் ஒப்பந்தம் போட்ட பின்னர் தேர்தல் வியூகங்களை வகுப்பதில் நிபுணராகக் கருதப்படும் பிரசாந்த் கிஷோர் முதல் முறையாக வெளியே ஒரு பொது நிகழ்வில் கலந்துக் கொண்டுள்ளது பலரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பிரசாந்த் கிஷோர் திமுக தலைவர் ஸ்டாலின் மருமகன் சபரீசனுடன் நேரில் வந்திருந்தார். இவரது வருகை அரசியல் வட்டத்தினர் பலரை திரும்பி பார்க்க வைத்துள்ளது.