2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்து காங்கிரஸ் புதுச்சேரி உட்பட கன்னியாகுமரி, விருதுநகர், திருச்சி, சிவகங்கை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 10 இடங்களில் போட்டியிட்டது. 9 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றிபெற்ற நிலையில் தேனியில் மட்டும் தோல்வியடைந்தது. தற்போது, நாடாளுமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து முகுல் வாஸ்னிக் தலைமையிலான காங்கிரஸ் நிர்வாகிகள் குழு, இன்று திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தியது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுவுடன், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக், தமிழக காங்கிரஸ் கமிட்டியின் பொறுப்பாளர் அஜோய் குமார், காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் குழு செய்தியாளர்களைச் சந்தித்தது. அப்போது பேசிய கே.எஸ்.அழகிரி, “முகுல் ஏற்கனவே திமுக தலைமைக்கு நன்கு அறிமுகமானவர். அவர்களுக்குள் நெருங்கிய உறவும் பண்பாடும் உண்டு. அதனடிப்படையில் பேச்சுவார்த்தை நடந்தது. பேச்சுவார்த்தை மிகவும் திருப்திகரமாக இருந்தது. மேற்கொண்டு பேச வேண்டிய விஷயங்களை வெகுவிரைவில் பேசுவோம் என்பதை தவிர உங்களுடன் பகிர்ந்துகொள்ள வேறொன்றும் இல்லை.
முதற்கட்ட பேச்சுவார்த்தையில் 40 தொகுதிகளிலும் எவ்வாறு வெற்றி பெறுவது, எவ்வாறு வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பது, எவ்விதமான தேர்தல் பரப்புரை செய்வது, பாஜக, அதிமுகவை எவ்வாறு எதிர்கொள்வது, கூட்டணிக் கட்சிகளை எவ்வாறு மகிழ்ச்சியாக வைத்துக்கொள்வது என்பது பற்றி பேசினோம்” என தெரிவித்தார்.