கொரோனா அச்சுறுத்தல் எதிரொலியாக திமுக பொதுக்குழு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு பல நாடுகளை கடும் அவதிக்கு உள்ளாக்கியிருக்கிறது. இந்தியாவை பொருத்தவரை 123 நபர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மத்திய மாநில அரசுகள் கொரோனா விழிப்புணர்வு குறித்த நடவடிக்கைகளை அதிவிரைவாக எடுத்து வருகிறது. தமிழகத்தில் உள்ள திரையரங்குகள், பள்ளிகள் உள்ளிட்டவற்றை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் மக்கள் கூடும் முக்கிய நிகழ்வுகளும் தள்ளிவைக்கப்படுள்ளன. அந்த வகையில் திமுக சார்பில் நடைபெற இருந்த திமுக பொதுக்குழு கூட்டம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
திமுக பொதுச் செயலாளர் மற்றும் பொருளாளரை தேர்வு செய்வதற்காக அக்கட்சியின் பொதுக்குழு வருகின்ற 29-ஆம் தேதி கூடவிருந்தது. இந்த நிலையில், கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையிலும், முன்னெச்சரிகை நடவடிக்கை எடுக்கும் வண்ணம் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பின் அடிப்படையில், பொதுக்குழுகூட்டத்தை ஒத்திவைப்பதாகவும், தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் நடைபெறவிருந்த கட்சி நிகழ்ச்சிகள் அனைத்தையும் மார்ச்31-ஆம் தேதி வரை ஒத்திவைக்குமாறு திமுகவினரை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.