தகுதி நீக்கம் செய்யப்பட்ட 3 கர்நாடக எம்எல்ஏக்கள் உச்சநீதிமன்றத்தில் மனு
கர்நாடக சபாநாயகரின் முடிவை எதிர்த்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் 3 பேர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மஜத எம்எல்ஏக்கள் சிலர் தங்களது பதவியை ராஜினாமா செய்வதாக சபாநாயகரிடம் ராஜினாமா கடிதத்தை அளித்தனர். இதனிடையே கர்நாடகாவில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ் - மஜத அரசு தோல்வி அடைந்தது. அதன்பின் பாஜக ஆட்சி அமைக்க உரிமை கோரிய நிலையில், ஆளுநர் அழைப்பை ஏற்று எடியூரப்பா முதல்வராக பதவியேற்றார். இதனிடையே அதிருப்தி எம்எல்ஏக்கள் 17 பேரை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் ரமேஷ்குமார் உத்தரவிட்டார்.
இந்நிலையில் தகுதி நீக்கத்திற்கு எதிரான சபாநாயகரின் முடிவை எதிர்த்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் 3 பேர் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரமேஷ், மகேஷ், சுயேச்சை எம்எல்ஏ சங்கர் ஆகியோர் இந்த மனுவினை தாக்கல் செய்துள்ளனர்.