உத்திரப் பிரதேசத்தில் திருமண நிகழ்ச்சியில் பேண்ட் வாத்திய கட்டணத்தை யார் செலுத்துவது என தகராறு ஏற்பட்டத்தில் ஆத்திரமடைந்த மாப்பிள்ளை திருமணத்தையே நிறுத்திவிட்டு மணமேடையில் இருந்து வெளியேறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரப் பிரதேசம் சஹரன்பூர் மாவட்டத்தில் உள்ள மிர்சாபூரில் தர்மேந்திரா என்ற இளைஞருக்கு திருமணம் நடைபெற இருந்தது. இதற்காக ஃபரூக்காபாத்தில் இருந்து உள்ள மிர்சாபூருக்கு பேண்ட் வாத்தியங்களை அழைத்து வந்துள்ளார் தர்மேந்திரா.
திருமண சடங்குகள் நடந்து கொண்டிருந்த நிலையில், மணமகன் தரப்பிடம் இசைக்குழுவினர் பணம் கேட்டனர். ஆனால் மணமகள் தரப்பில் பணம் கொடுக்க வேண்டும் என்று கூறி பணம் கொடுக்க மறுத்துவிட்டனர் மணமகன் தரப்பினர்.
மணமகள் தரப்பினர் தாங்கள் இசைக்குழுவை வரவழைக்கவில்லை எனக் கூறி, பணம் கொடுக்க முடியாது என தெரிவித்துள்ளனர். இதையடுத்து இரு தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் மணமகளும் வாக்குவாதத்தில் ஈடுபடவே, ஆத்திரமடைந்த மாப்பிள்ளை தர்மேந்திரா தனது பெருமையெல்லாம் காயப்பட்டு விட்டதாக கூறி மணமேடையில் இருந்து வெளியேறினார்.
மாப்பிள்ளை தான் அணிந்திருந்த 'நெக்லஸை' உடைத்துக்கொண்டு, தான் அழைத்து வந்திருந்த பேண்ட் வாத்திய ஊர்வலத்துடன் வெளியேறினார். இந்த சம்பவத்திற்குப் பிறகு மணமகள் தரப்பும் மணமகனின் குடும்பத்துடனான உறவைத் துண்டித்துக்கொண்டனர். பேண்ட் வாத்திய கட்டணத்தை யார் செலுத்துவது என தகராறால் திருமணமே நின்றுபோன சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.