செய்தியாளர் - ச.குமரவேல்
கேரளாவில் ஏற்பட்ட நிலச்சரிவு எந்தவகை நிலச்சரிவு? மேற்கு தொடர்ச்சி மழை வரும் நேரத்தில், கேரளா சந்திக்க போகும் நிலைமை என்ன? நிலச்சரிவை கண்டறிய தற்போது உள்ள தொழில்நுட்பங்கள் என்னென்ன? நிலச்சரிவு ஏற்பட காரணம், அவற்றை தடுக்கும் காரணிகள் என்னென்ன?
என்பது குறித்தெல்லாம் நமக்கு விளக்குகிறார் வேலூர் தனியார் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேரிடர் தடுப்பு மற்றும் மேலாண்மை துறை பேராசிரியர் கணபதி.
“இந்தியாவை பொறுத்தவரை மேற்கு தொடர்ச்சி மலை, ஆரவல்லி மலைத் தொடர், வடமேற்கு, வடகிழக்கு, இமயமலைகள் போன்ற பகுதிகள் அதிக நிலச்சரிவை சந்திக்கும் பகுதிகளாக உள்ளன.
நிலச்சரிவு என்பது அந்த இடத்தை பொருத்தும், அந்த இடங்களை நாம் எப்படி பயன்படுத்துகிறோம் என்பதை பொருத்தும் ஏற்படும். இத்துடன் அங்கு பொழியும் மழையின் தன்மையை பொருத்தும் அமைகிறது.
தமிழகத்தில் ஊட்டி, நீலகிரி, கேரளா போன்ற பகுதிகள் அதிகமான நிலச்சரிவு ஏற்படும் பகுதியாக உள்ளது. இந்தியாவைப் பொறுத்த வரைக்கும் எந்தெந்த பகுதிகள் நிலச்சரிவு ஏற்படும் பகுதிகள் என பிரித்து வைத்திருக்கிறார்கள். நிலச்சரிவை தற்போது ஓரளவுக்கு கணிக்க முடியும் அதற்கான தொழில் நுட்பங்கள் வந்துள்ளது. அது LANDSLIDE EARLY WARNING ஆகும்.
இதில் சவால் என்னவென்றால் துல்லியமாக அதனை கணிக்க முடியாது. அதற்கு நாம் முதலில் மலைகளை முழுவதுமாக கண்காணித்து ஆய்வு செய்ய வேண்டும். மிகத் துல்லியமாக கணக்கிட இன்னும் காலம் தேவைப்படும்.
தற்போது கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்டுள்ளது DEBRIS FLOW TYPE (டிப்ரிஸ் புலோ டைப்) நிலச்சரிவு. இந்த மாதிரி நிலச்சரிவுகள் ஆபத்துகளை அதிகமாக உண்டாக்குபவை. மேற்கு தொடர்ச்சி மலையில் இது போன்ற நிலச்சரிவுகள்தான் பொதுவாக ஏற்படுகிறது. தற்போது கேரளாவில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு சுமார் இரண்டு மூன்று கிலோமீட்டர் தொலைவிற்கு நகர்ந்து வந்து குடியிருப்புகளை தாக்கி உள்ளது. இது வெறும் நிலச்சரிவு மட்டுமல்ல... வெள்ளத்தோடு சேர்ந்து ஏற்பட்ட நிலச்சரிவு. ஆகவே இதை மிகப்பெரிய நிலச்சரிவாகத்தான் நாம் பார்க்க வேண்டும். அரசுக்கும் மக்களுக்கும் இது மிகப்பெரிய சவாலான காலகட்டம்.
2009 ல் மட்டும் மேற்கு தொடர்ச்சி மலையில் 1,150 சிறிய சிறிய நிலச்சரிவுகள் வந்துள்ளன. 10-15 பெரிய நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன. கேரள மாநிலமே அதிக நிலச்சரிவுகளை சந்திக்கும் ஒரு பகுதிதான். அதிலும் வயநாடு தொடர்ந்து நிலச்சரிவு ஏற்படக்கூடிய பகுதிதான். தற்போது நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் 2012, 1984 ஆகிய ஆண்டுகளிலும் பெரிய நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன.
2011 க்கு பிறகு அப்பகுதியில் மண் அரிப்பு அதிக அளவில் ஏற்பட்டுள்ளதுதான் தற்போது ஏற்பட்ட பெரும் அழிவுக்கு முக்கிய காரணம். அங்குள்ள மரங்களை அதிகப்படியான அகற்றுவதும், விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டுமானங்களும்தான் மண் அரிப்பு அதிகரிக்க காரணம்.
இன்று ஏற்பட்ட நிலச்சரிவில், கேரளா பெட்டிமுடி பகுதியில் மட்டும் 60 பேர் உயிரிழந்துள்ளனர் என சொல்லப்படுகிறது.
மழைப்பொழியும் போது மலைகளானது, தன் சரிவில் நீரை தேக்கி வைக்கும். அடுத்தடுத்து தொடர்ந்து மழை பொழியும் போது நீரை தேக்கிவைக்க முடியாமல் அந்த நிலம் அப்படியே சரிவை சந்திக்கிறது. இதுபோன்ற இடங்களில் மீட்புப் பணி என்பது மிகக் கடினமான ஒன்று.
அதிலும்கூட, வெறும் நிலச்சரிவு மட்டும் ஏற்பட்டிருந்தால் மீட்பு பணி கொஞ்சம் எளிமையாக இருந்திருக்கும். ஆனால் தொடர்ந்து கனமழை பெய்து தண்ணீர் தேங்கியுள்ளதால் மீட்புப்பணி மிகக்கடினமாக உள்ளது. குடியிருப்பு இருக்கும் இடங்களுக்கு அருகாமையில் மீட்பு பணியை தீவிரப்படுத்தினால் ஓரளவுக்கு பொதுமக்களை மீட்க முடியும். ஆனால் இத்தகைய நிலச்சரிவில் பொதுமக்கள் பாதுகாப்பாக இருப்பது சந்தேகம்.
கேரள சம்பவத்தை ஒரு எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ள வேண்டும். வரும் காலங்களில் தமிழகம் மற்றும் கேரளாவில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் அதிக நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதாக தெரிவித்திருக்கிறார்கள். ஆகவே இந்த ஏரியாக்களில் Mitigation (தடுப்பு) செய்ய வேண்டும். இன்னும் கூடுதலாக இந்த இடங்களை ஆய்வு செய்து வரும் காலத்தில் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஏற்கெனவே நிலச்சரிவு ஏற்பட்ட இடங்களில் மீண்டும் நிலச்சரிவை ஏற்படாமல் ஓரளவிற்கு தடுக்க முடியும்.
மலைச்சரிவு ஏற்படும் என கணிக்கப்படும் பகுதிகளில், செயற்கையான முறையில் சிமெண்ட் தடுப்புகளை அமைப்பதன் மூலம் நிலச்சரிவை ஓரளவு தடுக்க முடியும்.
சாயில் பயோ என்ஜினியரிங் மூலம் மலைச்சரிவு ஏற்படும் என கணிக்கப்படும் பகுதிகளில் அதிகமான மர, செடி, புல்வகையை நடவேண்டும். இதன்மூலம் மண் அரிப்பு மற்றும் நிலச்சரிவை அங்கு தடுக்க முடியும்.
மலைச்சரிவுகளில் அதிகமான நீர் தேங்கும் இடங்களை கண்டறிந்து குழாய்கள் மூலமாக அந்த நீரை வெளியேற்றுவதன் மூலமும் நிலசரிவை தடுக்க முடியும். இதற்கு உதாரணம் திருப்பதி மலைப் பகுதிகள். திருப்பதி மலைப் பகுதியில் அதிகமான நீர் தேங்கும் மழை சரிவுகளில் குழாய் அமைத்து இயற்கை முறையில் நீரை வெளியேற்றி வருகிறார்கள்.
நிலச்சரிவுகளுக்கு மிக முக்கியமான காரணம் முறையற்ற கட்டுமானங்கள்தான். சரியான வழிகாட்டுதல் மற்றும் தொழில்நுட்பத்தை ஆராயாமல் மலைப்பகுதிகளில் அதிக கட்டுமானங்களை கட்டுவதன் மூலம், மலைக்கு கீழ்ப்பகுதியில் அழுத்தம் கொடுக்கப்படுகிறது. இது நிலச்சரிவுகளை ஏற்படுத்துகிறது. இதை அரசு உன்னிப்பாக கவனித்து விதிமுறைகளை வகுக்க வேண்டும். மக்களும் அதனை பின்பற்ற வேண்டும்.
மேற்கு தொடர்ச்சி மலைகளைப் பொறுத்த வரைக்கும் தமிழகம் மற்றும் கேரளாதான், அதிகப்படியான சரிவுகளை கொண்ட அதிக நிலச்சரிவுகளால் பாதிக்கக்கூடிய பகுதியாக உள்ளது. ஆகவே இரு அரசும் கூடுதல் கவனத்தோடு இருக்க வேண்டும்” எனக் கூறினார்.