’இடஒதுக்கீட்டிற்கு ஆபத்து!’ கூட்டணி கட்சியே எதிர்ப்பு.. மத்திய அரசுப் பணிகளில் நேரடி நியமனம் ரத்து!
மத்திய அரசுப் பணிகளில் நேரடியாக அதிகாரிகளை நியமிக்கும் அறிவிப்பு ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
கடந்த 17 ஆம்தேதி யுபிஎஸ்சி வெளியிட்ட அறிவிக்கையின்படி, அரசுத்துறைகளில் 45 இணை செயலாளர்கள், இயக்குநர்கள் மற்றும் துணைச் செயலாளர்கள் நேரடி நியமனம் மூலம் நியமிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்தன.
இந்த நேரடி நியமனங்கள் மூலம், எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவினரின் இடஒதுக்கீட்டு உரிமைகள் பாதிக்கப்படும் என்று எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்தன. நேரடி நியமனங்கள் மூலம், அதிகாரத்திற்குள் ஆர்எஸ்எஸ் ஆட்களை நியமிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டினர். இடஒதுக்கீடு, அரசியல் சாசனத்துக்கு எதிராக மத்திய அரசு செயல்படுவதாகவும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இந்நிலையில், லேட்டரல் என்ட்ரி எனப்படும் நேரடி நியமனத்துக்கான நடைமுறையை நிறுத்தி வைக்கும்படி யுபிஎஸ்சி தலைவருக்கு மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கடிதம் எழுதியுள்ளார்.
அதில், சமூக நீதியை காக்கும் நடவடிக்கையாக நேரடி நியமன நடைமுறைக்கான விளம்பரம் ரத்து செய்யப்படுவதாக குறிப்பிட்டுள்ளார். வேலைவாய்ப்புகளில் சமூக நீதியை நிலைநாட்ட இடஒதுக்கீடு அவசியம் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளதாக கூறியுள்ள அவர், சமூக நீதியை நிலைநாட்டும் வகையில் நேரடி நியமன நடைமுறை இருக்க வேண்டும் என்பதில் பிரதமர் உறுதியுடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இடஒதுக்கீடு இல்லாததால் நேரடி நியமன நடைமுறை மறு ஆய்வு செய்யப்பட வேண்டும் என்றும் தனது கடிதத்தில் ஜிதேந்திர சிங் குறிப்பிட்டுள்ளார். நேரடி நியமனத்துக்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இதன் மூலம் ஓபிசி, பட்டியலின மக்களின் இட ஒதுக்கீடு பறிக்கப்படுவதாகவும் குற்றஞ்சாட்டியிருந்தனர். பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் லோக் ஜனசக்தி, பாமக ஆகிய கட்சிகளும் லேட்டரல் என்ட்ரி முறைக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இந்த முறை ரத்து செய்யப்பட்டுள்ளது.