தன்னார்வ தொண்டு நிறுவனம் அளிக்கவிருந்த விருதை ஏற்க மறுத்து கடிதம் எழுதியுள்ளார் கர்நாடக மாநில டி.ஐ.ஜி. ரூபா.
சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்று பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு, சிறைக்குள் பல நவீன வசதிகள் செய்து தரப்பட்டிருக்கின்றன. அதற்காக ரூ.2 கோடி லஞ்சம் அளிக்கப்பட்டுள்ளது என்று கூறி தமிழக, கர்நாடக அரசியலில் புயலை கிளப்பியவர் டி.ஐ.ஜி. ரூபா.
பெங்களூரில் ஆண்டுதோறும் "நம்ம சென்னை" என்ற தன்னார்வ தொண்டு அமைப்பு அரசுப் பணியில் சிறந்து விளங்கியவர்களுக்கு விருதுக் கொடுத்து கவுரவப்படுத்தி வருகிறது. மேலும் இந்த விருதுகள் பல்வேறு துறையில் உள்ள திறமையானவர்களுக்கும் வழங்கப்படும். ரூபா நேர்மையான அதிகாரியாக இருப்பதால் அவருக்கு "நம் பெங்களூரு 2018" விருது கொடுக்க எண்ணியது அந்தத் தன்னார்வ தொண்டு நிறுவனம்.
ஆனால், அந்த விருதை ஏற்க மறுத்துள்ளார் ரூபா. இது குறித்து அவர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார் அதில், "இந்த விருதை ஏற்க என் மனசாட்சி இடம் தரவில்லை, ஒவ்வொரு அரசு ஊழியர்களும் நடுநிலையான சமநிலையை மட்டுமே அரசியல் அமைப்புகளிலிருந்தும், அறக்கட்டளை அமைப்புகளிடமிருந்தும் எதிர்பார்க்கிறேன்" என டி.ஐ.ஜி. ரூபா குறிபிட்டுள்ளார்.