மகாராஷ்ட்ராவில் உத்தவ் தாக்கரே அரசுக்கு எதிராகக் குரல் எழுப்பும் எம்எல்ஏக்களுக்குப் பின்னணியில் இருப்பது யார்? என்ற கேள்வி எழுப்பப்பட்டு வரும் நிலையில், அவர்கள் கவுகாத்திக்குச் செல்லும் முன் தங்கியிருந்த சூரத் தங்கும் விடுதிக்கான கட்டணம் செலுத்தப்படாமல் உள்ளது தெரியவந்துள்ளது.
தேசிய அளவில் பெரிதும் பேசப்பட்டு வரும் மகாராஷ்டிர அரசியல் குழப்பத்திற்கு வித்திட்டிருக்கும் அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்களுக்கான செலவினங்களை கவனிப்பது யார்? என மக்கள் எழுப்பும் கேள்விக்கு இதுவரை விடை தெரிந்தபாடில்லை.
மகாராஷ்ட்ரா அரசுக்கு எதிராகக் குரல் எழுப்பும் சிவசேனாவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள், தற்போது அசாமில் தங்கி உள்ளனர். இவர்கள் தனித்த விமானத்தில் செல்லும் முன், சிறிது நேரம் குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்கியிருந்தனர். அதற்கான கட்டணம் இதுவரை செலுத்தப்படவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இவர்களுக்கான அறையை முன்பதிவு செய்தது யார் என்ற விவரமும் தங்கும் விடுதியின் பதிவேடுகளில் இல்லை எனக் கூறப்படுகிறது. அரசின் உயரதிகாரி ஒருவர் தங்கும் விடுதியின் நிர்வாகி ஒருவரிடம் தொலைபேசி வாயிலாகக் கூறி அறைகளைப் பதிவு செய்ததாகக் கூறப்படுகிறது.
இருப்பினும் அறைகளை திரு ஏ , திரு பி என்ற அடையாளக் குறியீடுகள் மூலமே பதிவு செய்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த அறைகளுக்கான கட்டணத் தொகை இதுவரை செலுத்தப்படாததால் இவர்களுக்கு யார் பொருளாதார ரீதியாக உதவி வருகிறார்கள் என்பது இன்னும் விடை தெரியாக் கேள்வியாகவே உள்ளதாகக் கூறப்படுகிறது.