தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சியை விமர்சனம் செய்யும் பல்வேறு வீடியோக்களை வெளியிட்டு வந்தார் யூடியூபர் துருவ் ரட்டி. இத்தகைய சூழலில், பாரதிய ஜனதா கட்சியின் மும்பை பிரிவின் செய்தித் தொடர்பாளர் சுரேஷ் கரம்ஷி நகுவா என்பவர் கடந்த ஜூலை 7ஆம் தேதி துருவ் பதிவிட்ட youtube வீடியோ காட்சிகளில் தன்னை பற்றி அவதூறான கருத்துக்களை தெரிவித்து இருப்பதாகவும் எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்திருந்தார்.
சுரேஷ் கரம்ஷி குறிப்பிட்ட வீடியோ என்பது My Reply to Godi Youtubers என்ற பெயரில் வெளியிடப்பட்டது. ஜூலை 7 ஆம் தேதி வெளியிடப்பட்ட இந்த வீடியோ தற்போது வரை 27 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்றுள்ளது. 2.5 மில்லியன் விருப்பங்களையும் பெற்றுள்ளது. இந்த வீடியோவில்தான் அவதூறான கருத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார் சுரேஷ்.
இந்த வழக்கில் துருவ் ரட்டிக்கு எதிராக, தன்னைப் பற்றியோ பாஜகவைப் பற்றியோ எந்த ஆன்லைன், ஆஃப்லைன் தளத்திலும் எந்த ஒரு கருத்தையும் பேசுவது ட்வீட் செய்வதை தடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். மேலும், சைபர் ஸ்பேஸில் தனக்கு அவதூறு ஏற்படுத்தியதாக ரூ.20 லட்சம் நஷ்டயீடும் கேட்டுள்ளார்.
இந்த மனு மீது விசாரணையை டெல்லி சாக்கெட் நீதிமன்ற நீதிபதி விசாரித்த நிலையில், இந்த மனு மீது பதில் அளிக்குமாறு நோட்டீஸ் பிறப்பித்ததுடன் நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பி உத்தரவு பிறப்பித்தார். வழக்கின் விசாரணையில் ஆகஸ்ட் 6ஆம் தேதி ஒத்தி வைத்தார் நீதிபதி.