“கேப்டனாகி விட்டேன் எனக் கூறி கட்டிப்பிடித்தார்”- தோனியின் நினைவுகளை பகிரும் காவல் அதிகாரி

“கேப்டனாகி விட்டேன் எனக் கூறி கட்டிப்பிடித்தார்”- தோனியின் நினைவுகளை பகிரும் காவல் அதிகாரி
“கேப்டனாகி விட்டேன் எனக் கூறி கட்டிப்பிடித்தார்”- தோனியின் நினைவுகளை பகிரும் காவல் அதிகாரி
Published on

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி ஓய்வு பெறுவதாக அறிவித்திருப்பது அவரது ரசிகர்களுக்கு மிகுந்த மன வருத்ததை ஏற்படுத்தி உள்ளது. எப்போதும் தோனி பற்றி ஒரு சிறிய விஷயம் சமூக வலைதளங்களில் வெளியானாலே அவரது ரசிகர்கள் அதனை கொண்டாடுவார்கள்.


தற்போது அவரது ஓய்வு அறிவிப்பை துக்கமான நாளாக ரசிகர்கள் நினைத்து சமூக வலைதளங்கள் மூலம் பல்வேறு கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர். ஆனால் 15 ஆண்டு கால நண்பராக தற்போது வரை இருந்து வரும் ஓய்வு பெற்ற காவல்துறை கூடுதல் எஸ்.பி. முரளி, இளைஞர்களுக்கு வழிவிடுவதற்காக தோனி ஓய்வு பெற்று விட்டாதாக கூறியுள்ளார்.

வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கே.என்.முரளி. 1979-ம் ஆண்டு தமிழக காவல்துறையில் நேரடி உதவி ஆய்வாளராக பணியை தொடங்கினார். காவல் ஆய்வாளராக பதவி உயர்வு பெற்ற பிறகு அயல் பணி காரணமாக டெல்லிக்கு இடமாற்றப்பட்டார். பிறகு 2001-ம் ஆண்டில் இருந்து 2003-ம் ஆண்டு வரை அமெரிக்கா வாஷிங்டன்னில் உள்ள இந்திய தூதரகத்தில் பாதுகாப்பு பிரிவில் பணியாற்றினார். இதையடுத்து 2004 முதல் 2005-ம் ஆண்டு வரை இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்தில் பாதுகாப்பு பிரிவில் பணியாற்றி உள்ளார். அப்போது மகேந்திர சிங் தோனியின் நட்பு கிடைத்துள்ளதாகவும் அந்த நட்பு தற்போது வரை தொடர்வதாகவும் கே.என்.முரளி பூரிப்போடு தெரிவித்துள்ளார்.


மேலும் தோனியின் நட்பு குறித்து கே.என்.முரளி புதியதலைமுறைக்கு பிரத்யேகமாக கூறியிருப்பதாவது, "தோனி கிரிக்கெட் லெஜண்ட். இலங்கையில் இருக்கும் இந்திய தூதரகத்தில் நான் பணியாற்றிய போது தோனியை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. 2005 ஆண்டு இந்திய அணி இலங்கையில் விளையாட வந்தது. அப்போது இந்திய அணி வீரர்களை பாதுகாக்கும் பணி எனக்கு வழங்கப்பட்டது. அதனால் 25 நாட்கள் இந்திய அணியுடனே இருந்தேன். அப்போது நட்சத்திர ஓட்டலில் தோனியின் பக்கத்தில் என்னுடைய அறை இருந்தது.

இலங்கையுடன் நடந்த போட்டி ஒன்றில் தோனிக்கு இடம் அளிக்கவில்லை. ஆனால் அது பற்றியெல்லாம் அவர் கவலையே படவில்லை. ஜாலியாக என்னிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது தமிழக காவல்துறையை பற்றியும் போலீஸ் ஸ்டோரி குறித்தும் கேட்டறிந்தார். ஆட்டத்தில் இருந்து தன்னை தூக்கி விட்டதை நினைத்து வருந்தாமல் விளையாடும் வீரர்களுக்கு குளிர்பானங்கள், பேட் போன்றவற்றை கொண்டுபோய் கொடுத்து வந்தார். இப்படியாக 36 முறை மைதானத்திற்குள் சென்று வீரர்களுக்கு தேவையான பொருட்களை கொடுத்துக் கொண்டே இருந்தது எனக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.


அந்த போட்டி முடிந்து செல்லும் போது, சார் நீங்கள் இந்திய அணியின் கேப்டனாக வருவீர்கள் என்று தோனியிடம் கூறினேன். அதேப்போல இந்திய அணியின் கேப்டனாகி சென்னை சேப்பாக்கத்திற்கு விளையாட வந்த தோனி, பாதுகாப்பு பணியில் இருந்த என்னை பார்த்து முரளி சார் நான் கேப்டனாகி விட்டேன் எனக் கூறி கட்டிப்பிடித்து அன்பை பரிமாறினார். அப்போதிருந்து தற்போது வரை அவருடனான நட்பு தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

இந்திய கிரிக்கெட் அணிக்குள் இளைஞர்கள் அதிகமாக வரவேண்டும் என தோனி எப்போதும் விரும்புவார். இளைஞர்களுக்காகவே ஓய்வை அறிவித்துள்ளார் என்று நினைக்கிறேன். அவரது அறைக்குள் எப்போதும் இளம் வீரர்கள் இருப்பார்கள். அவர்களுக்கு பல்வேறு அறிவுரைகளையும் போட்டி நுணுக்கங்களையும் கற்று கொடுப்பார்.


2005-ம் ஆண்டு தோனியை முதல் முறையாக எப்படி பார்த்தேனோ அதைப்போலவே தான் தற்போதும் இருக்கிறார். எந்தவித பந்தாவும் இல்லாமல் சாதாரணமாக கூலாக இருப்பார். சென்னைக்கு தோனி எப்போது வந்தாலும் என்னை கூப்பிடுவார் அல்லது நான் அவரை சந்திக்க செல்வேன். காவல் உதவி ஆணையராக இருந்த போது காவலர் குடியிருப்பில் இருந்த என்னுடைய வீட்டிற்கு அவரது மனைவியுடன் வந்தார். வீட்டிலேயே உணவு சாப்பிட்டார். ஓய்வு பெற்ற பிறகு தற்போது நான் கொரட்டூரில் உள்ள வீட்டிற்கும் மனைவி குழந்தையுடன் தோனி வந்துள்ளார். 

சென்னை மக்கள் நேர்மையானவர்கள் என தோனி எப்போதும் சொல்லுவார். சென்னை இளைஞர்களை வளர வைக்க வேண்டும் என யோசனை தெரிவித்துள்ளார். பயிற்சி அகாடமி ஒன்றை சென்னையில் ஆரம்பித்து இளைஞர்களை வளர்த்து விடவேண்டும் எனவும் சொல்லியிருக்கிறார்.”என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com