கர்நாடக சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகளை செய்துகொடுக்க லஞ்சம் கொடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டப் புகாரை அம்மாநில சிறைத்துறை டிஐபி சத்தியநாராயணா மறுத்துள்ளார். ஆனால், ஆதாரம் இருப்பதாக, டிஐஜி இன்று மீண்டும் கூறியுள்ளார்.
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலாவுக்கு விதிகளை மீறி சிறப்பு சமையல் அறை வசதி செய்து கொடுக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சசிகலா கேட்கும் உணவு வகைகளை செய்து தர சில கைதிகள் நியமிக்கப்பட்டிருப்பதாக கர்நாடக சிறைத் துறை டிஐஜி ரூபா சிறைத்துறை டிஜிபி சத்யநாராயணாவுக்கு அறிக்கை ஒன்றை அளித்துள்ளார். சசிகலாவுக்கு வசதிகள் செய்து தர சத்யநாராயணா 2 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளதாகவும் ரூபா அறிக்கையி்ல் குறிப்பிட்டுள்ளார். மேலும் சிறைத்துறை டிஐஜியான தனக்கு சிறையில் ஆய்வு செய்வதற்கு உரிமை உள்ளது என்றும் ரூபா விளக்கம் அளித்துள்ளார். இவ்விவகாரம் குறித்து விசாரணை செய்து
பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஆனால் இதை மறுத்துள்ள டிஜிபி சத்தியநாராயணா, சசிகலாவுக்கு சிறையில் எந்த வசதிகளும் வழங்கப்படவில்லை என கூறியுள்ளார். என் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைக்குத் தயார் என்றும் கூறியிருந்தார். ஆனால், இன்று செய்தியாளர்களை சந்தித்த டிஐஜி ரூபா, தன்னிடம் இதற்கு ஆதாரம் இருப்பதாகக் கூறியுள்ளார். இதனால் இந்த பிரச்னை மேலும் பரபரப்புக்குள்ளாகி இருக்கிறது.