இந்திய விமானங்கள் ஈரான், ஈராக் வளைகுடா வான் பகுதிக்குள் செல்ல வேண்டாம் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அருகே அமெரிக்க படைகள் நடத்திய தாக்குதலில் ஈரான் ராணுவ தளபதி சுலைமான் கொல்லப்பட்டதை அடுத்து, ஈரான் - அமெரிக்கா இடையே பதட்டமான சூழல் உருவாகியுள்ளது. ஈராக்கில் உள்ள அமெரிக்க படைகள் மீது ஈரான் இரண்டு முறை தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்நிலையில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. எவ்வித அத்தியாவசிய தேவையின்றி இந்தியர்கள் ஈராக் செல்ல வேண்டாம் என மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. அத்துடன், ‘ஈராக் நாட்டுக்குச் செல்வதை இந்தியர்கள் முடிந்த அளவுக்கு தவிர்க்க வேண்டும்.
ஈராக்கில் உள்ள இந்தியர்கள் எச்சரிக்கையாக இருங்கள். ஈராக்கில் உள்ள இந்தியர்களுக்குத் தேவையான உதவிகளை பாக்தாத், எர்பில் ஆகிய பகுதிகளில் உள்ள இந்திய தூதரகங்கள் செய்கின்றன’ எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அமெரிக்கா - ஈரான் இடையே பதட்டமான சூழல் நிலவி வரும் நிலையில், மத்திய அரசு இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.