சபரிமலையில் பக்தர்களின் வருகை தொடர்ந்து அதிகரித்து வருவதால் தரிசன நேரம் நீடிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக் காலத்தில் பத்தர்கள் வருகை அதிகரிப்பை தொடர்ந்து, ஏற்கனவே அதிகாலை 4 மணி என்றிருந்த நேரத்தை மாற்றி, அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு மதியம் 1 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. மேலும் மாலை நான்கு மணிக்கு நடை திறக்கப்பட்டு, இரவு 10 மணிக்கு பதில் இரவு 11 மணிக்கு நடை அடைக்கப்பட்டது.
இந்நிலையில், பக்தர்கள் வருகை மேலும் அதிகரித்து வருவதையடுத்து இன்று முதல் (22.11.22) அதிகாலை 3 மணிக்கு திறக்கப்படும் நடை, மதியம் 1 மணிக்கு அடைக்கப்பட்டு, மாலை 4 மணிக்கு பதிலாக ஒரு மணி நேரம் முன்பாக 3 மணிக்கு நடை திறக்கப்படும். இதையடுத்து வழக்கம்போல இரவு 11 மணிக்கு நடை அடைக்கப்படும் என திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு தெரிவித்துள்ளது.
சபரிமலையில் நடை திறக்கப்பட்ட 16 ஆம் தேதியில் இருந்து நான்கு நாட்களில் 2 லட்சம் பேர் தரிசனம் செய்துள்ளனர். விடுமுறை நாளான சனிக்கிழமை 75 ஆயிரம் பக்தர்களும் ஞாயிற்றுக் கிழமை ஒரு லட்சத்திற்கும் அதிகமானோரும் தரிசனம் முடித்துள்ள நிலையில், விடுமுறை நாள் முடிந்தும் கூட நேற்றும் 1 லட்சத்தைக் கடந்து பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.
இன்றும் நடை திறக்கப்பட்ட அதிகாலை 3 மணி முதலே பக்தர்கள் கூட்டத்தால் சபரிமலை திணறி வருகிறது. இதனால் சபரிமலையில் தரிசன நேரம் நீடிக்கப்பட்டுள்ளது.