சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக திறக்கப்பட்டுள்ள நிலையில், பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. இரண்டாம் நாளிலேயே நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்துவரும் நிலை உருவாகியுள்ளது.
உலகப் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் நடை, மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக திறக்கப்பட்டுள்ளது. "வெர்ச்சுவல் கியூ" மூலம் முன்பதிவு செய்த பக்தர்களுக்கு தரிசன அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. முன்பதிவு செய்யாமல் வரும் பக்தர்களுக்கு நிலக்கல்லில் "ஸ்பாட் புக்கிங்" வசதி செய்யப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகள் கொரோனா பொது முடக்கம், ஒரு ஆண்டு கொரேனா கட்டுப்பாடுகள் என மூன்று ஆண்டுகள் கடந்த நிலையில், தற்போது முழு தளர்வுகளுடன் பக்தார்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் நடை திறந்த முதல்நாளில் இருந்தே தரிசனத்திற்காக வரும் பக்தர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இரண்டாம் நாளான வெள்ளிக்கிழமையும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. அதிகாலை முதலே பக்தர்களின் வருகை தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது. அலைமோதும் பக்தர்கள் கூட்டத்தால் பெரிய நடைபாதை நிரம்பி வழிந்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். இரு முடியோடு 18ம் படியேறும் பக்தர்களை அங்கு பணியில் உள்ள போலீசார் மிகுந்த சிரமத்துடன் தரிசனத்திற்காக அனுப்பிவிடுகின்றனர்.
டிசம்பர் 27ல் மண்டல பூஜையும், 2023ம் ஆண்டு ஜனவரி 14ம் தேதி பொன்னம்பலமேட்டில் மகரஜோதி தரிசனமும் நடக்கும். ஜனவரி 20ம் தேதி மகர விளக்கு பூஜைக்காலம் நிறைவடைந்து நடை அடைக்கப்படும். 62 நாட்கள் நீண்ட மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காலத்தில் தொடர்ந்து பக்தர்கள் வருகை அதிகரிக்கும் எனவும், அதற்கேற்றவாறு பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.