இடைத்தேர்தலில் போட்டியிடும், தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களை வாக்காளர்கள் தோற்கடிக்க வேண்டும் என மதச்சார்பற்ற ஜனதா தளத் தேசியத் தலைவர் தேவ கவுடா கேட்டுக் கொண்டுள்ளார்.
இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டிருக்கும் அவர், பணத்திற்காகவும் அதிகாரத்திற்காகவும் கட்சியிலிருந்து விலகியவர்களுக்கு பாடம் புகட்டும் முழு அதிகாரம் வாக்காளர்களுக்கு இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இடைத்தேர்தலில் கர்நாடக மக்கள் எத்தகைய தீர்ப்பைத் தரப்போகிறார்கள் என்பதைக் காண நாட்டு மக்கள் ஆர்வமுடன் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
ஆகவே, இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளில், இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களை தோற்கடித்து கர்நாடகாவின் கண்ணியத்தை வாக்காளர்கள் காக்க வேண்டும் என்றும் தேவ கவுடா கேட்டுக் கொண்டுள்ளார்.
முன்னதாக, கர்நாடகாவில் குமாரசாமி தலைமையிலான மதர்சார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி அரசு கவிழக் காரணமாக இருந்த அந்த இரு கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் 17 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். அவர்கள் மீண்டும் தேர்தலில் போட்டியிடலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை அடுத்து, தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்களில் 16 பேர் கடந்த மாதம் பாரதிய ஜனதாவில் இணைந்தனர். 17 பேர் தகுதி நீக்கத்தால் காலியாக உள்ள தொகுதிகளில், 15-இல் இன்று இடைத்தேர்தல் நடைபெறுகின்றது.