கர்நாடக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பை புறக்கணித்த பகுஜன் சமாஜ் எம்.எல்.ஏவை கட்சியில் இருந்து மாயாவதி நீக்கியுள்ளார்.
பரப்பரப்பான அரசியல் சூழலில் இன்று கர்நாடக சட்டப் பேரவையில் குமாராசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இந்த வாக்கெடுப்பில் குமாரசாமி அரசுக்கு ஆதரவாக 99 எம்.எல்.ஏக்களும் எதிராக 105 எம்.எல்.ஏக்களும் வாக்களித்தனர். இதனையடுத்து குமாராசாமி தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியை தழுவியது. இதனைத் தொடர்ந்து குமாராசாமி முதலமைச்சர் பதவியிலிருந்து விலகியுள்ளார்.
இந்நிலையில் இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பகுஜன் சமாஜ் கட்சியின் எம்.எல்.ஏவான மகேஷ் பங்கேற்கவில்லை. முன்னதாக இந்த வாக்கெடுப்பில் பங்கேற்று குமாராசாமி தலைமையிலான அரசிற்கு ஆதரவு அளிக்கவேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி எம்.எல்.ஏ மகேஷிற்கு அறிவுறுத்தல் வழங்கியிருந்தார். எனினும் இவர் கட்சியின் அறிவுறுத்தலை ஏற்காமல் நம்பிக்கை வாக்கெடுப்பை புறக்கணித்து விட்டார்.
இதனையடுத்து மாயாவதி மகேஷ் மீது ஒழுங்கு முறை நடவடிக்கை எடுத்துள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் மாயாவதி பதிவிட்டுள்ளார். அதில், “கட்சியின் அறிவுறுத்தலை ஏற்க மறுத்து கர்நாடகா சட்டப்பேரவையின் நம்பிக்கை வாக்கெடுப்பை புறக்கணித்த மகேஷ் மீது கட்சி ஒழுங்கு முறை நடவடிக்கை எடுத்துள்ளது. எனவே மகேஷ் உடனடியாக கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.